அரசின் பங்களிப்பு மட்டும் வெற்றி தேடித்தராது தண்ணீர் பாதுகாப்பு முயற்சியில் மக்களும் பங்கேற்க வேண்டும்பிரதமர் மோடி அழைப்பு
தண்ணீர் பாதுகாப்பு முயற்சியில் மக்களின் பங்களிப்பு அவசியம். அரசின் முயற்சி மட்டும் வெற்றி தேடித்தராது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் ஏற்பாட்டில், மாநில நீர்வளத்துறை மந்திரிகளின் முதலாவது தேசிய மாநாடு நடந்தது. அதில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
அரசியல் சட்டப்படி, தண்ணீர் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே, நாட்டின் கூட்டு இலக்கை எட்டுவதற்கு மாநிலங்கள் பாடுபட வேண்டும்.
தண்ணீர் என்பது மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, கூட்டு பங்களிப்பு ஆகியவற்றுக்கு காரணமாக இருக்க வேண்டும்.
எந்த ஒரு பிரசார இயக்கத்திலும் மக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால்தான், அந்த பணியின் தீவிரத்தன்மையை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
அந்த இயக்கத்தின் உரிமையாளர் என்ற நினைப்பு, மக்கள் மனதில் உருவாகும். அத்திட்டம் ெவற்றி பெறும். அதற்கு 'தூய்மை இந்தியா' திட்டமே சாட்சி.
அதுபோல், தண்ணீர் பாதுகாப்பு முயற்சிகளில் மக்களும் பங்கெடுத்துக் கொள்வது அவசியம். மக்கள் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் அதிகபட்ச பங்களிப்பை அளிக்க வேண்டும். வெறும் அரசின் முயற்சிகள் மட்டுமே வெற்றிைய தேடித் தந்துவிடாது.
அதற்காக, ஒட்டுமொத்த பொறுப்பையும் மக்கள் மீது சுமத்திவிட்டு, அரசு தப்பித்துக் கொள்ள பார்ப்பதாக கருதக்கூடாது.
தொழில்துறை, விவசாயம் ஆகியவை தண்ணீர் அதிகமாக தேவைப்படும் துறைகள். அதுகுறித்து அத்துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். 100 நாள் வேைலத்திட்டத்தில், தண்ணீர் தொடர்பான திட்டங்களை அதிகமாக செய்ய வேண்டும்.
75-வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை உருவாக்க வேண்டும் அல்லது மறுசீரமைக்க வேண்டும் என்ற திட்டத்தை நிறைவேற்றி வருகிறோம். இதுவரை 25 ஆயிரம் நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நீர்நிலையும் 10 ஆயிரம் கனமீட்டர் தண்ணீரை சேமிக்கும்வகையில் தலா ஒரு ஏக்கர் நிலப்பரப்புடன் இருக்க வேண்டும். நீர்நிலைகளை மாநில அரசுகள் நன்கு பராமரிக்க வேண்டும்.
மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டம் மூலம் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி உள்ளன. ஒவ்வொரு மாதமும் எத்தனை வீடுகளுக்கு இணைப்பு தரப்பட்டது என்று ஊராட்சிகள் காலாண்டுக்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
பயன்படுத்திய தண்ணீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.