கர்நாடக பா.ஜனதா அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்; யூ.டி.காதர் எம்.எல்.ஏ. பேட்டி
கர்நாடக பா.ஜனதா அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று யூ.டி.காதர் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
மங்களூரு;
யூ.டி.காதர் எம்.எல்.ஏ. பேட்டி
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. யூ.டி.காதர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சுள்ளியா, சம்பாஜே பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொடர் மழையால் பல வீடுகள் சேதமடைந்தன. மழை பாதிப்புகளை தடுக்க மாவட்ட பொறுப்பு மந்திரி சுனில்குமார் தவறிவிட்டார்.
மேலும் மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைக்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பா.ஜனதா தலைமையிலான மாநில அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கர்நாடகத்திற்கு வந்தபோது அவரிடம் தேசிய பேரிடர் நிவாரண நிதியை கேட்க முதல்-மந்திரி, எந்தவொரு மந்திரிகளுக்கும் தைரியம் இல்லை. அதற்கு மாறாக கட்சியை பலப்படுத்துவது பற்றி பேசியுள்ளனர். மக்களை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.
3 சதவீத சமூக விரோதிகளால்...
எனவே மழைவெள்ளம் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க மந்திரி சுனில்குமார், குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.நான் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை மந்திரியாக இருந்தபோது கனமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலத்தை கண்டறிந்து வீடுகள் கட்டித்தர ஒப்புதல் அளித்தேன்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் வரை வாடகை வீட்டுக்காக ரூ.10 ஆயிரம் கொடுத்தோம். 3 சதவீத சமூக விரோதிகளால், 97 சதவீத பொதுமக்கள் வகுப்புவாத அமைதியின்மையால் பாதிக்கப்படுகின்றனர்.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாக்க நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதேநேரத்தில் சமானிய மக்களை பாதிக்காதவாறு, உத்தரவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.