பெகாசஸ் விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை!
பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
புதுடெல்லி,
பெகாசஸ் உளவு மென்பொருள் இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்பு. இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் செய்த அமளியில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்க, சுப்ரீம்கோர்ட்டால் 3 பேர் கொண்ட தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விவகாரம் மீண்டும் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்தியா, இஸ்ரேல் இடையே 2017-இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் மற்றும் ஏவுகணை மையப்புள்ளியாக இருந்ததாக அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து, 3 நபர் குழு நடத்திய விசாரணை முடிவடைந்த நிலையில், பெகாசஸ் விசாரணை அறிக்கையை கடந்த மே மாதம் 19ஆம் தேதியன்று சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், பெகாசஸ் விசாரணை ஆணையத்துக்கு அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் பெகாசஸ் மென்பொருள் வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப குழு அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது.