ஆம்புலன்சுகளில் வென்டிலேட்டர் வசதி இல்லாமல் நோயாளிகள் அவதி
சாம்ராஜ்நகரில் ஆம்புலன்சுகளில் வென்டிலேட்டர் வசதி இல்லாமல் நோயாளிகள் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொள்ளேகால்:
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால், குண்டலுபேட்டை, ஹனூர் ஆகிய தாலுகாக்களின் எல்லையோரங்களில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டால் உயர் சிகிச்சைக்காக நகரப்பகுதி அல்லது தாலுகாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வரவேண்டும். இதற்காக அரசு சார்பில் சிறப்பு ஆம்புலன்ஸ் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது ஆம்புலன்சில் வென்டிலேட்டர் கட்டாயம் இருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலான ஆம்புலன்ஸ்களில் வென்டிலேட்டர் இல்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே மாவட்ட கலெக்டர் சாருலதா சோமல் ஆம்புலன்சுகளில் வென்டிலேட்டர் கட்டாயம் இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 37 ஆம்புலன்சுகளில் 30 ஆம்புலன்சுகளில் வென்டிலேட்டர் இல்லை என்று தெரியவந்தது. இதனால் சிரமத்திற்குள்ளான பொதுமக்கள் உடனே ஆம்புலன்சுகளில் வென்டிலேட்டர் அமைக்கவேண்டும் என்று சுகாதாரத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை ஏற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.