சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா: பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு - இன்று நடக்கிறது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பம்பையில் அய்யப்பனுக்கு இன்று (புதன்கிழமை) ஆராட்டு நடக்கிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 9-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடந்தன. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் உத்சவ பலி நடைபெற்றது,
அதைத்தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடந்தது. அதற்கு முன்னதாக இரவு 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது அய்யப்ப சாமியை மேள, தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பள்ளி வேட்டைக்கு பின் யானை ஊர்வலம் மீண்டும் புறப்பட்டு இரவு 12 மணிக்கு சன்னிதானத்தை அடைந்தது.
ஆராட்டு விழா
திருவிழாவின் நிறைவாக இன்று (புதன்கிழமை) பகல் 11.30 மணிக்கு பம்பையில் ஆராட்டு விழா நடக்கிறது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட யானை மீது அய்யப்பனை அமர வைத்து மேளதாளம் முழங்க காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து பக்தர்கள் புடை சூழ ஊர்வலம் புறப்படுகிறது. பம்பை ஆற்றில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் அய்யப்ப சாமிக்கு ஆராட்டு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து பகல் 1 மணிக்கு பம்பை கணபதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு பின் சாமி ஊர்வலம் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சன்னிதானத்தை வந்தடைகிறது. அங்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர். திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும்.
பத்மநாபசாமி கோவில்
இதே போல், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராட்டு இன்று (புதன்கிழமை) சங்குமுகம் கடற்கரையில் நடைபெறுகிறது.
இதற்காக பத்மநாபசாமி கோவிலின் மேற்கு நடையில் இருந்து மாலை 5 மணிக்கு சாமி ஊர்வலம் புறப்படும். இந்த ஊர்வலம் விமான நிலையம் வழியாக கடந்து செல்லும் என்பதால் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 5 மணிநேரம் திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படும். இதன் காரணமாக மாலை 4 மணி முதல் 9 மணி வரை விமான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.