அமர்நாத் யாத்திரை; பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களை பயன்படுத்த முடிவு!

அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-07-01 13:08 GMT

ஸ்ரீநகர்,

அமர்நாத் யாத்திரை ஜூன் 30, 2022 இல் தொடங்கி ஆகஸ்ட் 11, 2022 அன்று முடிவடைகிறது. அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் கமாண்டர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முயற்சிப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த வாரம் மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாதுகாப்பான யாத்திரையை உறுதிசெய்யும் வகையில், அமர்நாத் கோவிலுக்கு செல்லும் வாகன வழித்தடங்களில் 130க்கும் மேற்பட்ட மோப்ப நாய்களை பயன்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

யாத்திரைக்கு இடையூறு விளைவிக்க பயங்கரவாத அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெடிபொருட்களைக் கண்டறிய நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும்,அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, 200 க்கும் மேற்பட்ட டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன

அமர்நாத் யாத்திரைக்கு அதிக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் குண்டு துளைக்காத வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த சக்திவாய்ந்த வாகனங்கள் தானியங்கி மேப்பிங் வசதி மற்றும் சமதளங்கள், காடுகள், நீர் மற்றும் உயரத்தில் உள்ள இடங்களில் எளிதாக நகரும் திறன் கொண்டவை.

மிகவும் பதற்றமான பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் 200-க்கும் மேற்பட்ட குண்டு துளைக்காத வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் நவீன வெடிபொருட்களை கண்டறியும் திறன் வாய்ந்தவை. வெடிபொருட்களைக் கண்டறிய இந்த வாகனங்களில் ஆழமான ஊடுருவல் ரேடார் (டிபிஆர்) உள்ளது.

ஸ்ரீநகர் - அமர்நாத் மற்றும் ஜம்மு - அமர்நாத் வழித்தடங்களில் வெடிபொருட்களைக் கண்டறிய இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்