இந்தியாவின் அண்டை நாடாக இருப்பதால் இலங்கை மக்களுக்கு நமது ஆதரவு உண்டு: வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்,
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அத்தியாசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகிறார்கள். பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது.
இதனையடுத்து, இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தள்ளது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்ததையடுத்து, பதறிப்போன கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தார்.
இந்நிலையில் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி ஜெய்சங்கர் கூறுகையில், "இலங்கையின் தற்போதைய நிலைமை பதற்றமானது மற்றும் சிக்கலானது. இந்தியாவின் அண்டை நாட்டினர் என்பதனால் இலங்கை மக்களுக்கு நமது ஆதரவையளிக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கையில் மிகவும் கடினமான கட்டத்தை கடக்க அவர்களுக்கு உதவ நாம் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.