உடல் உறுப்பு தானம் உன்னதமான மனிதநேய பணி- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

உடல் உறுப்பு தானம் உன்னதமான மனிதநேய பணி என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-08-13 21:36 GMT

பெங்களூரு: உடல் உறுப்பு தானம் உன்னதமான மனிதநேய பணி என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

உறுப்புகள் தானம்

உலக உடல் உறுப்புகள் தான விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

நாம் நமது இறப்புக்கு பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்தால் அதன் மூலம் பிறரை வாழ வைக்க முடியும். ஒருவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதின் மூலம் 8 பேரின் உயிர்களை காக்க முடியும். உடல் சருமம் முதல் அனைத்து உறுப்புகளையும் தானம் செய்ய முடியும். சுவாமி விவேகானந்தர் கூறியது போல் சாதனையாளருக்கு சாவு இறுதி கிடையாது.

பிறப்பு சிறப்பானது

நமது சாவுக்கு பிறகும் நமது சாதனை வாழ்கிறது. மனித பிறப்பு சிறப்பானது. உறுப்பு தானம் மூலம் இந்த சிறப்பான உயிரை பாதுகாக்க வேண்டும். கர்நாடகத்தில் 18 உறுப்பு தான மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் மூளை தான மற்றும் உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிறுநீரக தான மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இது மாநில அரசின் பெரிய சாதனை ஆகும். உறுப்பு தானம் என்பது உன்னதமான மனிதநேய பணி ஆகும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உறுப்பு தானத்தை வலியுறுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் மேக்ரி சர்க்கிளில் இருந்து விதான சவுதா வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்