ஷராவதி நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் துயர் தீர்க்க விரைவில் நடவடிக்கை

ஷராவதி நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் துயர் தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராகவேந்திரா எம்.பி. உறுதியளித்தார்.

Update: 2022-10-19 19:00 GMT

சிவமொக்கா;

விவசாயிகள் போராட்டம்

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் ஷராவதி நீர் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த நீ்ர் மின் உற்பத்தி நிலையத்திற்காக சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அதற்கு மாற்றாக வேறு இடத்தில் நிலம் வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது.

ஆனால் தற்போதுவரை அவர்களுக்கு வேறு இடத்தில் நிலம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது கையகப்படுத்தப்பட்ட நிலம் காலியாக இருக்கிறது. இதனால் விவசாயிகள் நிலத்தை தங்களுக்கு வழங்கும்படி கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, அரசுக்கு வழங்கிய நிலத்தை திருப்பி தர முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்து நேற்றுமுன்தினம் சிவமொக்கா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சிவமொக்கா தொகுதி எம்.பி. ராகவேந்திரா, மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், விவசாயிகளிடம் கூறியதாவது:-

அரசு ஆதரவாக நிற்கும்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது அதிகாரிகள், வக்கீல்கள் செய்த தவறால் சுப்ரீம் கோர்ட்டில் விவசாயிகளுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லி சென்று மத்திய நீர் பாசனத்துறை மந்திரியுடன் கலந்து பேசி ைகயகப்படுத்தப்பட்டு காலியாக இருக்கும் நிலங்களை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு திருப்பி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இதன்மூலம் விவசாயிகளின் துயர் விரைவில் தீர்க்கப்படும். எனவே, விவசாயிகள் அச்சப்படதேவையில்லை. உங்களுக்கு அரசு ஆதரவாக நிற்கும்.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்