துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டி

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் அறிவித்தார்.

Update: 2022-07-17 11:30 GMT

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ந் தேதி முடிகிறது. அதற்கு முன்பாக புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்தாக வேண்டும். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் கடந்த 5-ந் தேதி தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு நாளை மறுநாள் (19-ந் தேதி) கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை 20-ந் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெறுவதற்கு 22-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

போட்டி இருந்தால் அடுத்த மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும்.

இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில், மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெகதீப் தன்கர் (வயது 71) போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கு பின் வேட்பாளரை அறிவித்தார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் மங்களூர்வை சேர்ந்த மார்கரெட் ஆல்வா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். கோவா, குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநில கவர்னராகவும் பதவி வகித்துள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக அணி சார்பில் ஜகதீப் தன்கரும் எதிர்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் களமிறங்குகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்