மக்கள் ஆதரவு அமோகமாக இருப்பதால் எத்தனை கட்சிகள் ஒன்றாக இணைந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே

மக்கள் ஆதரவு அமோகமாக இருப்பதால் எத்தனை கட்சிகள் ஒன்றாக இணைந்தாலும் மோடியை வீழ்த்தமுடியாது என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-24 19:14 GMT

வலிமையான பிரதமர்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லும், அனைவருக்கமான அரசாக பணியாற்றுகிறது. இதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கமாகவும் உள்ளது. மோடி வலிமையான பிரதமராகவும், உலகத்திலேயே முதலாவது இடத்திலும் இருக்கிறார். ஜி 20 தலைமையை இந்தியா ஏற்றது பெருமையாக இருக்கிறது. இது மோடியின் தலைமையினால் சாத்தியமாகியிருக்கிறது. கடந்த 9 வருடத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நல்ல முறையில் பணியாற்றி இருக்கிறது.

தமிழகத்தில் எங்கள் கூட்டணி கட்சி அரசு இல்லாதபோதிலும், எங்களுடைய மாநிலமாக கருதி அனைத்து திட்டங்களையும் மற்ற மாநிலங்களுக்கு வழங்குவது போன்று உதவி செய்து வருகிறோம். தமிழகத்தில் சில இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்முறை நடக்கிறது. புதுக்கோட்டை விவகாரத்தில் (குடிநீர் தொட்டியில் மனிதகழிவு கலந்த சம்பவம்) விசாரணை நடந்து வருகிறது. விழுப்புரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காதது வருத்தம் அளிக்கிறது.

அம்பேத்கர் சிலை

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை ஒடுக்கி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்கவேண்டும். கன்னியாகுமரியில் முக்கடல் இணையும்போது, மனிதர்கள் ஏன் சமூகம், மத மாச்சரியங்களை கடந்து இணையக்கூடாது?

கன்னியாகுமரியில் அம்பேத்கர் சிலை நிறுவவேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே கோரிக்கை மனுவினை மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியிருக்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை ஒழிக்க அரசியல் கட்சிகள், அரசு சாரா அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரும் முன்வரவேண்டும். இவ்வாறு செய்தால்தான் சாதிகள் ஒழிக்கப்படும். அனைத்து சமூகங்களும் ஒன்றாக இணைந்தால் மட்டுமே சாதி ஒழியும். இதுபோன்று கலப்பு திருமணத்தை ஆதரிக்க வேண்டும். கலப்பு திருமணம் செய்வதால், சாதிகள் ஒழிக்கப்படும்.

அமோக ஆதரவு

நரேந்திர மோடியை எதிர்கொள்ள ஒன்று திரண்ட 15 அரசியல் கட்சிகளின் சித்தாந்தங்கள் வேறு, வேறு. இதனால் அவர்கள் ஒன்று சேருவதற்கு வாய்ப்பு இல்லை. நரேந்திர மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர முயற்சி செய்கின்றன. மோடியை வீழ்த்துவது என்பது சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு அல்ல. மக்கள் அவர் பக்கம் இருக்கிறார்கள். அவருக்கு அமோக ஆதரவு இருக்கிறது. இதனால் எத்தனை கட்சிகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்தாலும் பிரயோஜனம் இல்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.வின் தலைவர்கள் ஒன்றாக சேரவேண்டும்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் இந்திய குடியரசு கட்சியை (ராம்தாஸ் அத்வாலே அணி) கூட்டணியில் இணைத்து பணியாற்ற வேண்டும். எங்கள் கட்சிக்கு தமிழகத்தில் கணிசமான வாக்குகள் உள்ளன. அனைவரும் இணைந்து பணியாற்றினால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடங்களை பெறமுடியும். தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை மக்கள் கொடுக்கிறார்கள். அந்தவகையில், நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு கணிசமான இடங்கள் கிடைப்பதன் மூலம் சட்டசபை தேர்தலிலும் எங்கள் கூட்டணியே வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்