எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் தொடங்கியது

இக்கூட்டத்தில் தொகுதி பங்கீடு, கூட்டாக பிரசாரம் செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-09-13 11:42 GMT

புதுடெல்லி,

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ம் தேதி மும்பையிலும் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட 28 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இதில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இறுதி செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும், இந்தியா கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் தொடங்கியது. 14 உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவில் சரத்பவார், டி.ஆர்.பாலு, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் தொகுதி பங்கீடு, கூட்டாக பிரசாரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெறலாம் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்