மாநில வளர்ச்சியை கருதி அதானி, அம்பானி நிறுவனங்களுடன் என் அரசு கைகோர்த்தது- மம்தா பானர்ஜி

மாநிலத்தின் வளர்ச்சிக்காக அதானி, அம்பானி நிறுவனங்களுடன் எனது அரசு கைகோர்த்தது என்று மம்தா பானர்ஜி கூறினார்.

Update: 2022-07-04 16:25 GMT

கொல்கத்தா,

முடிச்சு போடக்கூடாது

கொல்கத்தாவில், ஒரு ஆங்கில பத்திரிகையின் மாநாடு நடந்தது. அதில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

அவர் பேசியதாவது:-

அரசியலும், தொழிலும் வெவ்வேறானவை. இரண்டையும் முடிச்சு போடக்கூடாது. நீங்கள் வளர்ச்சி அடைய விரும்பினால், எல்லோரையும் ஈடுபடுத்த வேண்டும். பழத்தை அனைவருக்கும் பகிர வேண்டும்.

ஏ யார்?, பி யார்? என்று நான் பார்க்க மாட்டேன். அவர்களால் என்ன நன்மை என்றுதான் பார்ப்பேன்.

கைகோர்த்தது

அந்தவகையில் மாநிலத்தின் வளர்ச்சிக்காகத்தான் அதானி குழுமத்துடனும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசுடனும் எனது அரசு கைகோர்த்துள்ளது.

அதானி குழுமம், கொல்கத்தாவில் தரவு வங்கியை அமைத்து வருகிறது. அம்பானி குழுமம், கேபிள் இறங்குதளத்தை அமைத்து வருகிறது.

ஆனால், மோடி அரசோ, பா.ஜனதா மனப்பான்மை கொண்ட தொழிலதிபர்களை மட்டுமே ஊக்குவித்து வருகிறது. எங்கிருந்து பணம் வரும் என்றுதான் பார்க்கிறார்கள். அதுதான் அவர்களுக்கும், எங்களுக்கும் இடையிலான வித்தியாசம். தொழில்துறையை கட்டமைப்பதில்தான் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.

நிராகரிக்க ஓட்டு

பா.ஜனதா ஆளும் மாநிலங்கள், போராட்டக்காரர்களின் சொத்துகளை புல்டோசர் கொண்டு இடிக்கின்றன. அதுபோல், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை மக்கள் ஜனநாயக முறையில் இடித்து தள்ளுவார்கள்.

அந்த தேர்தல், அரசாங்கத்தை தேர்வுசெய்ய போடும் ஓட்டாக இருக்காது. பா.ஜனதாவை நிராகரிக்கவும், எதிர்க்கவும் போடும் ஓட்டாக இருக்கும்.

வாரிசு அரசியல் பற்றி பா.ஜனதா அலட்டிக்கொள்கிறது. வங்காளதேசத்தில், முஜிபுர் ரகுமான் இறந்தவுடன், ஷேக் ஹசீனா பொறுப்பேற்றார். அதை செய்ய வேறு யார் இருக்கிறார்கள்?

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்