ஜார்கண்ட் பகவான் பிர்சா உயிரியல் பூங்காவில் 2 கோடி ரூபாய் செலவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா...!!!

ஓரிரு மாதங்களில் பொதுமக்கள் பார்வைக்காக பகவான் பிர்சா உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறக்கப்பட உள்ளது.

Update: 2023-07-16 06:56 GMT

ராஞ்சி,

ஜார்கண்ட் ராஞ்சி நகரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் பகவான் பிர்சா உயிரியல் பூங்கா உள்ளது. 104 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இந்த உயிரியல் பூங்காவில் 83 வகையான பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பறவைகளை சேர்ந்த சுமார் 1,450 விலங்குகள் உள்ளன.

அங்கு 19 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய திறந்தவெளி வண்ணத்துப்பூச்சி பூங்கா கட்டப்பட்டுள்ளது. வண்ணத்துப்பூச்சியினைப் பற்றி தெரிந்து கொள்ளவும், அதன் பிரியர்களுக்கு பொழுதுபோக்கினையும் நோக்கமாகக் கொண்டு, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இது தயார்படுத்தப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக வண்ணத்துப்பூச்சிகள் காப்பகம், தேன் செடிகளை வளர்ப்பது, வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கான நடைபாதை அமைத்தல், குளம் மற்றும் நுழைவு வாயில் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது பூங்காவில் சில அழகுபடுத்துதல் மற்றும் பிற பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓரிரு மாதங்களில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.

வண்ணத்துப்பூச்சிகள் இயற்கையாக வளரும் வகையில் பூங்காவில் சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.900 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு மூடப்பட்ட காப்பகம் கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் அவைகள் பறவைகளிடம் இருந்து பாதுகாக்கப்படுகின்றன. வண்ணத்துப்பூச்சி பூங்காவின் ஆண்டு பராமரிப்புக்கு சுமார் ரூ.25 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலில் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைகள், பிற விலங்குகளுக்கான உணவு ஆதாரங்களில் வண்ணத்துப்பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜார்கண்டில் 75க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி வகைகள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்