ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் வருகிற 8-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (6-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார். 10-ந்தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம் போல நடைபெறும். மாத பூஜை காலங்களைப் போலவே நெய் அபிஷேகம், கலச பூஜை, களப பூஜை, சகஸ்ர கலச பூஜை, படி பூஜை என அனைத்து பூஜைகளும் நடக்கிறது.
கோவிலில் 8-ந்தேதி ஓணம் சிறப்பு வழிபாடு மற்றும் ஓண சத்யா நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து உள்ளது. சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன் பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நாளை முதல் 10-ந்தேதி வரை நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.