ஓணம் பண்டிகையால் முளைத்த சோதனை - அதிர்ச்சியில் கேரள அரசு...!
ஓணம் பண்டிகைக்காக கேரள அரசு ஊழியர்களுக்கு தலா 4,000 ரூபாய் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள அரசின் செலவுகள் வெகுவாக அதிகரித்துள்ளதால், ரிசர்வ் வங்கியில் அவசர செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மாதம் ஒன்றுக்கு, கேரள அரசின் செலவுகள் சராசரியாக 14,500 கோடி ரூபாயாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் செப்டம்பர் முதல் வாரத்தில் மட்டும், கேரள அரசின் செலவுகள்15,000 கோடி ரூபாயை கடந்துள்ளது.
ஓணம் பண்டிகைக்காக கேரள அரசு ஊழியர்களுக்கு தலா 4000 ரூபாய் போனஸ் அளிக்கப்பட்டுள்ளது. போனஸ் பெற தகுதியில்லாத ஊழியர்களுக்கு தலா 2750 ரூபாய் பண்டிகை அலவன்ஸ் அளிக்கப்பட்டுள்ளது. 87 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு ஓணம் உணவு தொகுப்பு அளிக்க 425 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை தொடர்பாக செலவிடப்பட்ட மொத்த தொகை, 2021ஐ விட 2022ல் இரு மடங்காக, 6,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ரிசர்வ் வங்கியிடம் அவசர செலவுகளுக் காக கடன் வாங்கி, செலவுகளை சமாளித்து வருகிறது.
கேரள அரசின் கடன் சுமை மார்ச் 31-ல் 3.32 லட்சம் கோடியாக, மாநில மொத்த உற்பத்தியில் 37 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் கேரள அரசின் கடன் சுமை, மாநில மொத்த உற்பத்தியில் 37.2 சதவீமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில், மாநில மொத்த உற்பத்தி அடிப்பையிலான கடன் சுமையில், பஞ்சாப், ராஜஸ்தான், பீகாருக்கு அடுத்து, நான்காவது இடத்தில் கேரளா உள்ளது. அதே வேளையில், கேரளாவில் வசூலாகும் ஜி.எஸ்.டி வரியின் அளவு 2021 ஆகஸ்ட்டை விட 2022 ஆகஸ்ட்டில் 26 சதவீதம் அதிகரித்து, 2,036 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.