மாணவியின் ஹால்டிக்கெட்டில் நடிகை சன்னிலியோன் படம்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவிக்கு ஹால்டிக்கெட்டில் நடிகை சன்னி லியோன் படம் வந்தது. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-11-09 18:45 GMT

பெங்களூரு: ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவிக்கு ஹால்டிக்கெட்டில் நடிகை சன்னி லியோன் படம் வந்தது. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சன்னிலியோன் படம்

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவை சேர்ந்த மாணவி ஒருவர் ஆசிரியர் தகுதி தேர்வுக்காக (டெட்) படித்து வந்தார். இதற்காக அவர் சிவமொக்காவில் உள்ள ருத்ரப்பா கல்லூரியில் பயிற்சி வகுப்புக்கு சென்றார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் தகுதி தேர்வு மாநிலம் முழுவதும் நடந்தது. இதற்கிடையே கொப்பா மாணவி, இந்த தேர்வுக்காக தனது ஹால்டிக்கெட்டை கல்வித்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது, ஹால்டிக்கெட்டில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக பிரபல நடிகை சன்னிலியோனின் கவர்ச்சி படம் இடம் பெற்றிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி, இதுபற்றி ருத்ரப்பா கல்லூரி முதல்வரிடம் தெரிவித்தார்.

போலீசில் புகார்

இதையடுத்து அவர், கல்வித்துறையிலும், சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே மாணவியின் படத்திற்கு பதிலாக நடிகை சன்னிலியோன் புகைப்படம் உள்ள ஹால்டிக்கெட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவோருக்கு மட்டும் தான் பயனர் அடையாள எண் மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) வழங்கப்படும். அதனை அவர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தோம். மேலும் அவற்றை யாரிடமும் கொடுக்ககூடாது எனவும் கூறியிருந்தோம். அந்த அடையாள எண் மற்றும் கடவுச்சொல் மூலம் மட்டுமே ஆன்-லைனில் தகவல்கள் பதிவேற்றம் செய்ய முடியும். அப்படி இருக்கையில் இந்த விவகாரத்தில் எங்கள் மீது தவறு இல்லை என தெரிவித்தனர்.

மாணவி கருத்து

இதுபற்றி அந்த மாணவி கூறுகையில், ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் மற்றும் ஹால்டிக்கெட்டில் எனது தகவல்களை வேறொரு மூலம் பதிவேற்றம் செய்தேன். அப்போது தவறு நடந்திருக்கலாம் என கருதுகிறேன் என்றார்.

ஆனால் இந்த விவகாரத்திற்கு கல்வித்துறை தான் காரணம் என மாநில காங்கிரஸ் சமூகவலைத்தள பிரிவு தலைவர் பி.ஆர்.நாயுடு கூறுகையில், கர்நாடக கல்வித்துறையின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்து இருப்பதாக குற்றம்சாட்டினார்.

விசாரணை

இதற்கு பதில் அளித்துள்ள கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், தேர்வரே விண்ணப்பத்தை ஆன்-லைனில் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய முடியும். கல்வித்துறை இதில் எந்த தவறும் செய்யவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் உண்மை தெரியவரும் என்றார்.

இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்