எல்லை பிரச்சினை விவகாரத்தில் மராட்டியத்தில் கர்நாடக அரசு பஸ்களை மறித்து போராட்டம்
எல்லை பிரச்சினை விவகாரத்தில் மராட்டியத்தில், கர்நாடக அரசு பஸ்களை மறித்து போராட்டம் நடத்தியதுடன், கருப்பு மை பூசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு: எல்லை பிரச்சினை விவகாரத்தில் மராட்டியத்தில், கர்நாடக அரசு பஸ்களை மறித்து போராட்டம் நடத்தியதுடன், கருப்பு மை பூசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எல்லை பிரச்சினை
கர்நாடகம்-மராட்டிய மாநிலங்களுக்கு இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த எல்லை பிரச்சினை விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த எலலை விவகாரம் மீண்டும் மோதலை உருவாக்கி உள்ளது. மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் கர்நாடக பகுதிகளை மராட்டியத்திற்கு சொந்தம் என்று கருத்து கூறி இருந்தார். இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அதே நேரத்தில் எல்லை பிரச்சினை விவகாரத்தில் மராட்டிய மாநிலத்திற்கு ஒரு அங்குல நிலம் கூட விட்டு கொடுக்க மாட்டோம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தேவேந்திர பட்னாவிசுக்கு பதிலடி கொடுத்து டுவிட்டர் பதிவு வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், எல்லை பிரச்சினையை கையில் எடுத்துள்ள மராட்டியர்கள் கர்நாடக அரசு பஸ்களை மறித்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருப்பு மை பூசினர்
கர்நாடக எல்லையில் உள்ள மராட்டிய மாநிலத்தில் சென்ற கர்நாடக அரசு பஸ்களை மறித்து மராட்டிய ஏகிகிரண் சமிதியினர் போராட்டம் நடத்தினர். புனே மாவட்டம் தவுன்ட் பகுதியில் பெலகாவி மாவட்டம் நிப்பானியில் இருந்து சென்ற கர்நாடக அரசு பஸ்சில் 'ஜெய் மராட்டியம்', 'மராட்டிய பகுதிகளை உரிமை கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது' என்ற வாசகங்களை சிலர் கருப்பு மை மூலமாக எழுதினார்கள்.
அரசு பஸ்கள் மீது மராட்டியத்திற்கு ஆதரவான வாசகங்களை எழுதியதுடன், பஸ் மீது ஏறிய மர்மநபர்கள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அத்துடன் கர்நாடகத்தில் உள்ள கானாப்பூர், பீதர், பெலகாவி மராட்டிய மாநிலத்திற்கு சொந்தம் என்றும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தி உள்ளது. கர்நாடக அரசு பஸ்களை மறித்து போராட்டம் நடத்தியதற்கு கன்னட அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.