காங்கிரஸ் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்- டி.கே.சிவக்குமார் அறிவிப்பு
காங்கிரஸ் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெருமை அளிக்கிறது
மல்லிகார்ஜுன கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக வருகிற 6-ந் தேதி கர்நாடகம் வருகிறார். அவர் நாட்டில் பிற மாநிலங்களுக்கு செல்வதற்கு முன்பு கர்நாடகத்திற்கு வர விரும்பினார். அன்று காலை 10.50 மணிக்கு பெங்களூரு வருகிறார். அதன் பிறகு மதியம் 2.35 மணிக்கு அரண்மனை மைதானத்தில் கட்சியின் மாநாடு நடக்கிறது. இதில் எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் இருந்து வந்து கலந்து கொள்கிறார்கள்.
50 ஆண்டுகளாக கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் தேசிய தலைவராக பதவி ஏற்று இருப்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ளோம். வருகிற 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் சேர்க்கை
விண்ணப்பத்திற்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் ஆகும். விண்ணப்பிக்கும்போது பொது பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.2 லட்சத்திற்கு வரைவோலையை வழங்க வேண்டும். தலித் மற்றும் பழங்குடியினருக்கு அதில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் கட்சியின் அலுவலக கட்டிட செலவுகளுக்கு பயன்படுத்தப்படும். தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளவர்களும் விரும்பினால் விண்ணப்பிக்க வேண்டும். நானும் போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பிக்க உள்ளேன்.
கர்நாடகத்தில் பலர் காங்கிரஸ் உறுப்பினராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் நாங்கள் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை பணியை மீண்டும் தொடங்கியுள்ளோம். பிற கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களின் விவரங்களை பகிரங்கப்படுத்த மாட்டேன். எங்கள் கட்சியின் கொள்கைகள் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தியின் தலைமையை ஏற்று கட்சிக்கு வந்தால் அவர்களை சேர்த்து கொள்வோம்.
பா.ஜனதாவுக்கு செல்கிறது
கட்சியில் யாரை சேர்த்து கொள்வது என்பது குறித்து முடிவு எடுக்க ஒரு குழு அமைத்துள்ளோம். அந்த குழுவிடம் விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம். எங்கள் கட்சிக்கு நன்கொடை வருவது இல்லை. அனைத்து நன்கொடைகளும் பா.ஜனதாவுக்கு செல்கிறது. அதனால் தேர்தல் செலவுகளுக்காக நாங்கள் கட்சி நிர்வாகிகளிடம் பணம் வசூலிக்கிறோம்.
எங்கள் கட்சி சார்பில் போட்டியிட வயது வரம்பு கிடையாது. 92 வயது உடைய சாமனூர் சிவசங்கரப்பா எம்.எல்.ஏ.வாக உள்ளார். முன்னோர்களை நாங்கள் நீக்க மாட்டோம். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
================