ஒடிசா ரெயில் விபத்து; இந்திய ரெயில்வேயில் ஏ.டி.பி. நடைமுறையை அமல்படுத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
ஒடிசா ரெயில் விபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைத்து விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளி கிழமை இரவில் பெங்களூரு, சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு வருகின்றன. காயமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதிக்கு மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் பிரதமர் மோடியும் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த விபத்தில், பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும், விபத்து நடந்து எப்படி என்பது பற்றியோ, விபத்துக்கான காரணம் மற்றும் மனித தவறால் விபத்து ஏற்பட்டு உள்ளதா? உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் சரிவர தெரியவில்லை. தீவிர விசாரணைக்கு பின்னரே விவரங்கள் வெளிவரும் என கூறப்படுகிறது.
இந்த சூழலில், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்து பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில், நிபுணர் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதற்காக உடனடியாக, இந்திய ரெயில்வேயில் கவாச் பாதுகாப்பு நடைமுறை என கூறப்படும் தானியங்கி ரெயில் பாதுகாப்பு (ஏ.டி.பி.) நடைமுறையை அமல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் உத்தரவுகள் ஆகியவை பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.