மனைவியை சேர்த்து வைப்பதாக கூறி ரூ. 5 ஆயிரம் வாங்கிய மந்திரவாதி - மனைவி திரும்பி வராததால் குத்திக்கொலை
மனைவியை சேர்த்து வைப்பதாக கூறி ரூ. 5 ஆயிரம் வாங்கிய பின்னர் மனைவி திரும்பி வராததால் மந்திரிவாதி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் ஜெய்ஜ்பூர் மாவட்டம் பண்டாஹரொன் பகுதியை சேர்ந்தவர் சாந்தனு பிஹிரா ( வயது 40). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, சாந்தனுவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் மற்றும் சண்டை நிலவி வந்தது. இதன் காரணமாக சாந்தனுவின் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 3 மாதங்களாக அவர் தனது அம்மா வீட்டில் இருந்துள்ளார்.
இதையடுத்து, மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்க உதவுமாறு மனியா பாபர் (வயது 47) என்ற மந்திரவாதியிடம் சாந்தனு கேட்டுள்ளார். இதற்கு ரூ.5 ஆயிரம் தரும்படி மனியா கூறவே அந்த பணத்தை சாந்தனு கொடுத்துள்ளார்.
ஆனால், வெகுநாட்கள் ஆகியும் தனது மனைவி மற்றும் மகள்கள் சேர்ந்து வாழ வீட்டிற்கு வராததால் மந்திரவாதி மீது சாந்தனு ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், மந்திரவாதி மனியா நேற்று சாந்தனு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, உறுதியளித்தபடி அம்மா வீட்டிற்கு சென்ற மனைவியை மீண்டும் சேர்த்து வைக்காததால் கொடுத்த ரூ.5 ஆயிரம் பணத்தை திருப்பி தரும்படி சாந்தனு கேட்டுள்ளார். அப்போது, சாந்தனுவுக்கும் மந்திரவாதி மனியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் சாந்தனு தான் மறைத்துவைத்திருந்த கத்தியை கொண்டு மந்திரவாதி மனியாவை சரமாரியாக குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சாமியார் மனியா பாபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மந்திரவாதி என கூறப்படும் மனியா பாபர் மராட்டியத்தை சேர்ந்தவர் நெபதும் அவர் தனது மனைவியுடன் வாடைகை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மனியா பாபர் கால்நடைகளை பராமரிக்கும் வேலையை செய்து வந்துள்ளார்.
மந்திரவாதி மனியாவை கொலை செய்த சாந்தனு போலீசில் சரணடைந்தார்.