தடையை மீறி மத அமைப்பு யாத்திரை நடத்த திட்டம் - பாதுகாப்புப்படையினர் குவிப்பு

பள்ளிகள், வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செல்போன் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-28 05:59 GMT

சண்டிகர்,

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த மாதம் 31ம் தேதி இந்து மத அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ஷபா யாத்ரா என்ற பெயரில் யாத்திரை நடத்தியது. இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக கொண்ட நூ மாவட்டத்தின் முக்கிய பகுதியில் யாத்திரை வந்த போது யாத்திரை மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து இது இரு தரப்பு வன்முறை வெடித்தது. வன்முறையில் வீடுகள், வணிக வளாகங்கள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நூ மாவட்டத்தில் தொடங்கிய இந்த வன்முறை அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. டெல்லி அருகே உள்ள குருகிராமிலும் வன்முறை பரவியது. இந்த வன்முறை சம்பவங்களில் 2 போலீசார் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது.

இதனிடையே, கடந்த 31ம் தேதி தடைபட்ட ஷபா யாத்திரை மீண்டும் நடத்தப்படும் என விஷ்வ இந்து பரிஷத்தின் கிளை அமைப்பான சர்வ் ஜதிய இந்து மகாசபா கடந்த 13ம் தேதி நடத்திய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, தடைபட்ட ஷபா யாத்திரை 28ம் தேதி (இன்று) நடைபெறும் என விஷ்வ இந்து அமைப்பு தெரிவித்தது.

ஆனால், யாத்திரையின் போது ஏற்கனவே வன்முறை நடைபெற்றதாலும் , வரும் 3ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஜி20 பிரதிநிதிகள் மாநாடு நூ மாவட்டத்தில் நடைபெறுவதாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக யாத்திரையை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.

மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தபோதும் திட்டமிட்டபடி யாத்திரை இன்று நடைபெறும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து தடையை மீறி யாத்திரை நடைபெறுவதை தடுக்க நூ மாவட்ட எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புப்படையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிமாவட்டத்தினர் நூ மாவட்ட எல்லைக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூ மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செல்போன் இண்டர்நெட் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், நூ மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.     

Tags:    

மேலும் செய்திகள்