வடமாநில தொழிலாளர் விவகாரம்:'யூ டியூப்' பிரபலம் மணிஷ் காஷ்யப் வழக்கு ஒத்திவைப்பு- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
போலி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய பீகாரை சேர்ந்த ‘யூடியூப்’ பிரபலம் மணிஷ் காஷ்யப்பை தமிழக போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி,
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய பீகாரை சேர்ந்த 'யூடியூப்' பிரபலம் மணிஷ் காஷ்யப்பை தமிழக போலீசார் கைது செய்தனர்.
அவர், தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், தனக்கு எதிரான வழக்குகளை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக் கேட்டும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு அவசர மனுவாக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மணிஷ் காஷ்யப் சார்பில் ஆஜரான வக்கீல், "வட மாநில தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூப் பிரபலம் மணிஷ் காஷ்யப்புக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் நகல் கூட வழங்கப்படவில்லை" என வாதிட்டார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் அமித் ஆனந்த் திவாரி, சஞ்சய் ஹெக்டே மனுதாரர் ஏற்கனவே சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டியதுடன், சட்ட விரோதமாக கைது செய்யப்படவில்லை என வாதிட்டனர்.
"சிறையில் இருந்தால், மனுதாரர் மணிஷ் காஷ்யப்புக்கு எப்படி இடைக்கால நிவாரணம் அளிக்க முடியும்?" என கேட்ட நீதிபதிகள், விசாரணையை 10-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.