சவதத்தி எல்லம்மா தொகுதி பா.ஜனதா பெண் வேட்பாளரின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
பெலகாவி மாவட்டம் சவதத்தி எல்லம்மா தொகுதி பா.ஜனதா பெண் வேட்பாளரின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பின்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பெங்களூரு:
பா.ஜனதா பெண் வேட்பாளர்
கர்நாடகத்தில் 224 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடைபெற்றிருந்தது. நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இந்த நிலையில், பெலகாவி மாவட்டம் சவதத்தி எல்லம்மா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ரத்னா மாமனி கடந்த 18-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இவர் மறைந்த கர்நாடக சட்டசபை துணை சபாநாயகர் ஆனந்த் மாமனியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் வேட்பு மனு பரிசீலனையின் போது ரத்னா மாமனியின் வேட்பு மனுவில் பல்வேறு தவறுகள் இருப்பதால், அதனை நிராகரிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வாஸ் மற்றும் ஆம்ஆத்மி வேட்பாளர் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தார்கள். அதாவது ரத்னா மாமனி தாக்கல் செய்த வேட்பு மனுவில் படிவம் 26-ல் 2019-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் 2018-ம் ஆண்டுக்கான படிவம் 26-ஐ பூர்த்தி செய்து இணைத்து இருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டு கூறி இருந்தனர்.
இரவு 7.38 மணிக்கு மனு தாக்கல்
அத்துடன் 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி ரத்னா மாமனியின் வேட்பு மனு இல்லாததால், அதனை நிராகரிக்க வேண்டும். மேலும் அவர் பிரமாண பத்திரமும் தாக்கல் செய்யவில்லை. அத்துடன் கடந்த 20-ந் தேதி 2-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த போது, இரவு 7.38 மணியளவில் விதிமுறைகளை மீறி கொடுத்திருந்தார். ஏனெனில் மதியம் 3 மணிக்குள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அப்படி இருந்தும் இரவு 7.38 மணியளவில் அவர் வேட்பு மனுவை அளித்துள்ளார். வேட்பு மனுவில் ஏதாவது பகுதி நிரப்பப்படாமல் இருந்தால் தான், 2-வது முறை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். முதல் மனுவிலேயே அனைத்து பகுதிகளையும் அவர் நிரப்பி இருந்தார். இதுபோன்ற காரணங்களால் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சியினர் வலியுறுத்தினார்கள்.
பெண் வேட்பாளர் நிம்மதி
இதையடுத்து, சவதத்தி எல்லம்மா தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை நேற்று முன்தினம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை 11 மணியளவில் சவதத்தி தாசில்தார் ராஜு கோலாரா முன்னிலையில் ரத்னா மாமனியின் வேட்பு மனு குறித்து விசாரணை நடைபெற்றது. அப்போது அவரது தரப்பில் ஆஜரான வக்கீல், வேட்பு மனு சட்டபூர்வமாக இருப்பதற்கான ஆதாரங்களை வழங்கினார். பின்னர் நீண்ட இழுபறியை தொடர்ந்து ரத்னா மாமனியின் வேட்பு மனு அங்கீகரிக்கப்படுவதாக தாசில்தார் ராஜு கோலாரா அறிவித்தார்.
இதனால் வேட்பு மனு தள்ளுபடி ஆகும் என்ற பீதியில் இருந்த பா.ஜனதா வேட்பாளர் ரத்னா மாமனி நிம்மதி அடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது வேட்பு மனுவில் எந்த விதமான தவறுகளும் இல்லை. எதிர்க்கட்சிகள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறியதால், பிரச்சினை ஏற்பட்டது. இறுதியில் சட்டப்படி நான் வெற்றி பெற்றுள்ளேன். இந்த தேர்தலில் சவதத்தி தொகுதியில் நான் பெற்றி பெறுவது உறுதி" என தெரிவித்தார்.