பயங்கரவாதத்தை எந்த காரணமும் நியாயப்படுத்த முடியாது - மும்பை தாஜ் ஓட்டலில் ஐ.நா. பொதுச்செயலாளர்
மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் அஞ்சலி செலுத்தினார்.
மும்பை,
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். லண்டனில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு அவர் மும்பை வந்தடைந்தார். மும்பை விமான நிலையத்திற்கு வந்த ஆண்டனியோவுக்கு அதிகாரிகள் உரிய மரியாதை அளித்தனர்.
இந்நிலையில், ஆண்டனியோ இன்று மும்பை தாஜ் ஓட்டலுக்கு சென்றார். அங்கு 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் பேசிய ஆண்டனியோ, பயங்கரவாதம் முழுமையான தீய சக்தி. எந்த காரணங்களும், சாக்குப்போக்கும், குறைகளும் ஒருபோதும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தாது. இன்றைய உலகில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. 166 பேரின் உயிரை வாங்கிய மிகவும் கொடூரமான பயங்கரவாத செயல்நடைபெற்ற இங்கு நான் மிகவும் ஆழ்ந்த உணர்வுடன் உணர்கிறேன்.
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் இந்த உலகத்தின் வீரர்கள். மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இந்தியர்கள், உலகின் பிற பகுதிகளை சேர்ந்த குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவது உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் முக்கியமாகும். பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவது ஐநா சபையின் மைய நோக்கம்' என்றார்.