எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை; கெலாட்டிடம் ராகுல் திட்டவட்டம்
காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24 முதல் 30-ம் தேதி வரை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் யார்? என்பதில் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.
குறிப்பாக, மூத்த தலைவர்கள் சசிதரூர், திக் விஜயசிங், அசோக் கெலாட் உள்ளிட்டோர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட உள்ளதாக ராஜஸ்தான் முதல்-மந்திரியும், கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தியை அசோக் கெலாட் சந்தித்தார். அதன்பின்னர், கேரளாவில் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை பயணத்தில் கெலாட் பங்கேற்றுள்ளார். தலைவர் பதவிக்கு போட்டியிட ராகுல்காந்தியிடம் கெலாட் வேண்டுகோள் விடுத்த நிலையில் அதை ராகுல் நிராகரித்துவிட்டார்.
இது தொடர்பாக அசோக் கெலாட் கூறுகையில், அனைவரின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கும்படி ராகுல்காந்தியிடம் நான் பல முறை கோரிக்கை விடுத்தேன். ஆனால், காங்கிரசின் அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் வரக்கூடாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்' என்றார்.