பீகாரில் மதமாற்ற தடை சட்டம் தேவையில்லை: பா.ஜனதாவின் கோரிக்கைக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் எதிர்ப்பு!

நிதிஷ்குமாரின் இந்த அறிக்கை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியான பா.ஜ.,வுக்கு வலுவான அடியாக பார்க்கப்படுகிறது.

Update: 2022-06-09 11:57 GMT

பாட்னா,

மத்திய மந்திரியும், பாஜக எம்.பி.யுமான கிரிராஜ் சிங் உட்பட பா.ஜனதா கட்சியின் சில தலைவர்கள், இந்துக்களின் மத நம்பிக்கையை மாற்றும் சம்பவங்களைத் தடுக்க பீகாரில் மதமாற்றத் தடைச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக நேற்று பேசிய பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறுகையில், பீகார் மாநில அரசு இப்பிரச்சினையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு நிம்மதியாக வாழ்ந்து வருவதால், மாநிலத்தில் 'மதமாற்ற தடைச் சட்டம்' தேவையில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில் பாஜகவும் நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. சில சர்ச்சைக்குரிய விஷயங்களில் இரு ஆளும் கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நிதிஷ்குமாரின் இந்த அறிக்கை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.,வுக்கு வலுவான அடியாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஜேடியு தலைவர் ஒருவர் கூறுகையில், "நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், வெளிப்படையான காரணங்களுக்காக எங்கள் கட்சியின் சித்தாந்தங்கள் பாஜகவின் கொள்கைகளிலிருந்து வேறுபட்டவை" என்று ஜேடியு தலைவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்