லக்கிம்பூர்கெரியில் தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டார்களா? போலீஸ் விசாரணை

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு தலித் சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

Update: 2022-09-15 05:15 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு தலித் சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

லால்பூர் மஜ்ரா தமோலி பூர்வா கிராமத்தில், நேற்று மாலை அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தலித் சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கோரி கிராம மக்கள் மற்றும் சிறுமிகளின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுமிகள் கொலை வழக்கில், மூன்று பேர் அந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அப்பகுதி கிராம மக்களும் சிறுமிகளின் குடும்பத்தினரும் பேரணியாகச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து லக்கிம்பூர் கேரி போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் சுமன், போலீஸ் படையுடன் போராட்ட இடத்திற்கு விரைந்தார் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களுக்கு உறுதியளித்தார். அப்போது சாலை மறியலை கைவிடுமாறு கிராம மக்களை வலியுறுத்தினர்.

இந்த நிலையில், சிறுமிகள் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச போலீசார் இன்று தெரிவித்தனர்.

சிறுமிகளின் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை.மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, மாநில அரசை கடுமையாக சாடினார், "லக்கிம்பூரில் (உ.பி.) சகோதரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மனதை உலுக்குகிறது. பட்டப்பகலில் சிறுமிகள் கடத்தப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பொய்யான விளம்பரங்கள் கொடுப்பதால் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, உ.பி.யில் பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன?" என்று மாநில அரசை கடுமையாக சாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்