'போர்டிங் பாசு'க்காக கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது - விமான போக்குவரத்து அமைச்சகம்
‘செக்-இன்’ கவுண்ட்டர்களில் வழங்கப்படும் ‘போர்டிங் பாசு’க்காக கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
விமான நிலையங்களில் செக்-இன் கவுண்ட்டர்களில் போர்டிங் பாஸ் பெறும் பயணிகளிடம் இருந்து சில விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றன.
குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, செக்-இன் கவுண்ட்டர்களில் வழங்கப்படும் போர்டிங் பாஸ்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மேற்படி போர்டிங் பாஸ்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் தனது டுவிட்டர் தளத்தில், 'செக்-இன் கவுண்ட்டர்களில் வழங்கப்படும் போர்டிங் பாஸ்களுக்கு சில விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கவனத்தில் வந்துள்ளது. இது விமான விதிகள் 1937-க்கு எதிரானது' என்று குறிப்பிட்டு உள்ளது.