இன்று டெல்லி செல்லும் நிதிஷ்குமார்: பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை அணி திரட்ட முயற்சி

4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்லும் நிதிஷ் குமார் அங்கு காங்கிரஸ்-மாநில கட்சிகளின் நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-09-05 03:36 GMT

கோப்புப்படம்

பாட்னா,

4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்லும் நிதிஷ்குமார் காங்கிரஸ் மற்றும் 6 மாநில கட்சிகளின் நிர்வாகிகளை சந்திக்கிறார். பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை அணி திரட்ட அவர் முயற்சிக்கிறார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணி நடந்து வருகிறது.

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஆகியோர் இதற்கான முயற்சியை எடுத்து வருகின்றனர்.

பீகாரில் பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சி நடத்திய முதல்-மந்திரி நிதிஷ்குமார், பா.ஜனதா உறவை துண்டித்துக்கொண்டு, ராஷ்டிரீய ஜனதாதளம் ஆதரவுடன் பதவியை தொடருகிறார். அவரும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், நிதிஷ்குமார் 4 நாட்கள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்திக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார். எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் விதமாக 6 மாநில கட்சிகளின் நிர்வாகிகளையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

இந்த தகவல்களை ஐக்கிய ஜனதாதளத்தின் தேசிய செய்தித்தொடர்பாளர் கே.சி.தியாகி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

பிரதமர் வேட்பாளரா?

நிதிஷ்குமாரை நாங்கள் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை. அவரை 'உதய சூரியன்' என்று கூறுகிறோம். சூரியன், கிழக்கில்தான் உதிக்கும்.

பா.ஜனதா உறவை நிதிஷ்குமார் துண்டித்தவுடன், 1980-களின் இறுதியில் எதிர்க்கட்சிகள் அணியில் வி.பி.சிங் இணைந்தது போன்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சந்திரசேகர ராவ், பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத அணியை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், மாற்று அணியில் காங்கிரஸ் இருப்பது அவசியம் என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவேன்

இதற்கிடையே, பாட்னாவில் ஐக்கிய ஜனதாதளத்தின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று முடிவடைந்தது. கூட்டத்தில், நிதிஷ்குமார் பேசியதாவது:-

பா.ஜனதா தனக்கு ஆதரவாக இருப்பவர்களை 'நல்ல நடத்தை கொண்டவர்கள்' என்கிறது. அதன் கொள்கைகளை எதிர்ப்பவர்களை 'ஊழல்வாதிகள்' என்கிறது. பிற கட்சிகளில் இருந்து தலைவர்களை இழுப்பது ஊழல் இல்லையா?

பா.ஜனதாவை வீழ்த்த நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்ட பாடுபடுவேன் என்று அவர் பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய நிதிஷ்குமார், ''ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளால்தான் பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்க முடியும்'' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்