பி.எப்.ஐ. அமைப்பினருக்கு நிதி வழங்கிய 16 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை

பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்ட பி.எப்.ஐ. அமைப்பினருக்கு நிதி வழங்கிய 16 பேரின் வீடுகளில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் கேரளாவை சேர்ந்தவர் உள்பட 5 பேரை அவர்கள் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Update: 2023-05-31 21:18 GMT

மங்களூரு:

பிரதமர் மோடி

பீகார் மாநிலம் பாட்னாவுக்கு கடந்த ஆண்டு(2022) ஜூலை மாதம் 12-ந் தேதி பிரதமர் மோடி வந்தார். அவர் பாட்னாவில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தினார். அந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாக பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்பைச் சேர்ந்த சபீக் பயத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதையடுத்து இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பினர் விசாரித்தனர். விசாரணையில் பாட்னாவில் பி.எப்.ஐ. அமைப்பினர் முகாம் அமைத்து பிரதமர் மோடியை கொல்ல பயிற்சி மேற்கொண்டதும், அதுபோல் அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்திலும் முகாம் அமைத்திருந்ததும் தெரியவந்தது. இதற்காக அவர்களுக்கு அரபு நாடுகள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து நிதி உதவி செய்திருந்ததும் தெரியவந்தது. அதைக்கொண்டு அவர்கள் பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டம் தீட்டி வந்ததும் தெரியவந்தது.

பி.எப்.ஐ. அமைப்பு

இதையடுத்து பி.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த பலரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டதால் பி.எப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசால் தடையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுபற்றி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதில், பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து நிதி வழங்கப்பட்டது தெரியவந்தது. அதற்கான தொழில்நுட்ப ஆதாரங்களும் சிக்கின.

அதையடுத்து பி.எப்.ஐ. அமைப்பினர் பயன்படுத்திய வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கி ரூ.120 கோடியை பறிமுதல் செய்தது. அதன்பிறகு பி.எப்.ஐ. அமைப்பினருக்கு நிதி வழங்கியவர்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

16 பேரின் வீடுகளில் சோதனை

அதன்படி நேற்று அவர்கள் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் 16 பேரின் வீடுகள், அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகளில் சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. அந்த 16 பேரும் பீகாரில் மோடி மீது தாக்குதல் நடத்த பயிற்சி பெற்றவர்களுக்கு நிதி உதவி வழங்கியதாகவும், அதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெல்தங்கடி தாலுகா உன்சேகட்டே அருகே உருவாலு கிராமத்தைச் சேர்ந்த முகமது கைஸ், பேரிஞ்சே கிராமத்தைச் சேர்ந்த பத்ருதீன், ஆகியோரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். பத்ருதீன் மூடபித்ரி அருகே பட்டாடி பகுதியில் டைல்ஸ் கடை வைத்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுடன் புஞ்சலகட்டே, வேனூர் போலீசார் உடனிருந்தனர்.

ஆஸ்பத்திரிகள்...

பண்ட்வால் தாலுகாவில் கோல்தமஜலு கிராமத்தில் ஜக்காரியா, அஸ்பக் ஆகியோரின் வீடுகளிலும், நரிக்கொம்பு கிராமத்தில் இஜாஸ் அகமது என்பவரின் வீட்டிலும், கொல்நாடு கிராமத்தில் அபுபக்கர் சித்திக் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும் சஜிபநாடு பகுதியில் வசிக்கும் ஜாகீர், பொல்லை பகுதியில் வசிக்கும் முபாரக், எம்.டி. உஜாலை பகுதியில் வசிக்கும் மணி, நேரு நகரில் வசிக்கும் முகமது ரமீஸ், நேரலகத்தே பகுதியில் வசிக்கும் சுபேர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், பணிபுரியும் இடங்கள், அவர்களுக்கு சொந்தமான ஆஸ்பத்திரிகள் என மொத்தம் 16 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

7 பேரிடம் விசாரணை

மேலும் இவர்களில் 7 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களின் பெயர், விவரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்த நிலையில் பண்ட்வாலை சேர்ந்த முகமது சினான், சஜீபமூடாவை சேர்ந்த சர்ப்ராஸ் நவாஸ், இக்பால், புத்தூரை சேர்ந்த அப்துல் ரபீக், கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்த அபித் ஆகிய 5 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவம் நேற்று தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் கடந்த மார்ச் மாதமும் கர்நாடக கடலோர மாவட்டங்களில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள், அவர்களுக்கு நிதி உதவி அளித்தவர்கள் என பலரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்