கர்நாடக பட்ஜெட்டில் புதிய சலுகைகள்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்த பட்ஜெட்டில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பெண் விவசாயிகளுக்கு ரூ.500 ஊக்கத்தொகை உள்பட பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2023-02-17 18:45 GMT

பெங்களூரு:

பட்ஜெட் தாக்கல்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 2½ மாதங்கள் மட்டுமே உள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றன. அடுத்த மாத(மார்ச்) இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் (வரவு-செலவு திட்டம்) 17-ந் தேதி (அதாவது நேற்று) தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில் பல்வேறு புதிய திட்டங்கள், சலுகைகள், ஊழியர்களுக்கு சம்பள உயர்வு போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. ஏற்கனவே அமலில் உள்ள வரிகளும் உயர்த்தப்படவில்லை. மாறாக சம்பளதாரர்கள் பயனடையும் வகையில் தொழில் வரி செலுத்துவதற்கான சம்பள உச்சவரம்பு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி மாதம் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் வாங்குகிறவர்கள் தொழில்வரி செலுத்த தேவை இல்லை. அவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.500 உதவித்தொகை

அங்கன்வாடி ஊழியர்கள், மதிய உணவு திட்ட ஊழியர்கள், நூலகர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு ரூ.1,000 வரை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ரூ.100 கோடியில் இலவச பஸ் பாஸ் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அயோத்தியில் கட்டுவது போல் ராமநகரில் ராமர் கோவில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்துக்களின் மனதை வெல்ல முடியும் என்று பா.ஜனதா கருதுகிறது. இது எந்த அளவுக்கு அக்கட்சிக்கு கைகொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நிலமற்ற விவசாய பெண் கூலி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட் ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 182 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது உபரி பட்ஜெட் ஆகும். சிறுபான்மையினர் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பட்ஜெட்டில் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ஆதாரங்கள் மூலம் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 910 கோடி வருவாய் திரட்டப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.5 ஆயிரத்து 272 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. வருகிற ஆண்டில் ரூ.77 ஆயிரத்து 750 கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தி

நிதி பற்றாக்குறை ரூ.60 ஆயிரத்து 581 கோடியாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.60 சதவீதம் ஆகும். வருகிற ஆண்டின் இறுதியில் கர்நாடகத்தின் கடன் ரூ.5 லட்சத்து 64 ஆயிரத்து 896 கோடியாக அதிகரிக்கும். இது கர்நாடகத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 24.20 சதவீதம் ஆகும். இதன் மூலம் கர்நாடக நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு கடன், நிதி பற்றாக்குறை போன்றவை வைக்கப்பட்டுள்ளதாக பசவராஜ் பொம்மை கூறினார். பெங்களூரு நகருக்கு மட்டும் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள பிற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* விவசாயிகளுக்கான வட்டியில்லா கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* கிசான் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 'பூ சிரி' திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

* 'சகஸ்ர சரோவர்' திட்டத்தின் கீழ் 1,000 ஏரிகள் மேம்படுத்தப்படும்.

* உருளை கிழங்கு சாகுபடியில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* ரூ.75 கோடியில் சிட்லகட்டாவில் மிகப்பெரிய பட்டுக்கூடு சந்தை உருவாக்கப்படும்.

கடல் உணவு பூங்கா

* முதோல் நாய் இனத்தை பாதுகாக்கும் பொருட்டு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* பைந்தூரில் அரசு-தனியார் பங்களிப்பில் கடல் உணவு பூங்கா அமைக்கப்படும்.

* யாதகிரி, ராய்ச்சூர், பல்லாரியில் இறால் உற்பத்தி தொழிற்பேட்டைகள் நிறுவப்படும்.

* மகதாயி ஆற்றில் இருந்து நீரை எடுப்பதற்கான கலசா-பண்டூரி கால்வாய் திட்ட பணிகளுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ரூ.39 ஆயிரத்து 31 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* 'ரைத்த வித்யா' நிதி திட்டம் தையல் கலைஞர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இலவச கல்வி

* 'முதல்-மந்திரி வித்யா சக்தி' திட்டத்தின் கீழ் அரசு பி.யூ.கல்லூரி, டிகிரி கல்லூரியில் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும்.

* கல்யாண-கர்நாடக மேம்பாட்டு வாரியத்திற்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது

* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.37,960 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

* நீர்ப்பாசனத்துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

* விவேகா திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 556 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படும்.

* பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இலவசமாக பயணிக்க அரசு பஸ்கள் கூடுதலாக 1,000 முறை இயக்கப்படும்.

* பள்ளிகளில் 5 ஆயிரத்து 581 கழிவறைகள் கட்டப்படும்.

* 'ஜீவசுதே' திட்டத்தின் கீழ் புற்றுநோய் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படும்.

சுயதொழில் பயிற்சி

* 'மனே மனே ஆரேக்கிய' திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு ஆண்டுக்கு 2 முறை இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும்.

* ராய்ச்சூரில் எய்ம்ஸ் மாதிரி ஆஸ்பத்திரியும், குமட்டாவில் உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரியும் நிறுவப்படும்.

* நிமான்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் உடல் உறுப்புகள் இணைப்பு ஆஸ்பத்திரி ரூ.146 கோடி செலவில் அமைக்கப்படும்.

* ஒரு லட்சம் பெண்களுக்கு வீட்டிலேயே சுயதொழில் செய்ய பயிற்சி அளிக்கப்படும்.

* கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1,800 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* நகரங்களில் கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கத்தில் நகரங்களில் 4 ஆயிரம் குழந்தைகள் நல மையங்கள் நிறுவப்படும்.

* அங்கன்வாடி ஊழியர்களுக்கு நடப்பு ஆண்டு முதல் பணிக்கொடை வழங்கப்படும். இதற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* பிற்படுத்தப்பட்ட நலத்துறை உண்டு உறைவிட பள்ளிகளில் அறிவியல், கணித ஆர்வத்தை மாணவர்களுக்கு தூண்டும் வகுப்புகள் நடத்தப்படும்.

* வெளிநாடுகளில் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை வட்டி மானியம் வழங்கப்படும்.

புதிய விமான நிலையம்

* சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த டிகிரி முடித்த 300 பெண்களுக்கு இந்திய தொழில் நிறுவனத்தில் தொழில் முனைவு பயிற்சி அளிக்கப்படும்.

* கர்நாடக வீட்டு வசதி வாரியம் சார்பில் 30 ஆயிரம் வீட்டுமனைகளை உருவாக்கி பொதுமக்களுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* மைசூரு, சிக்பள்ளாப்பூர், சித்ரதுர்கா, கோலார் மற்றும் ராமநகரில் ஒருங்கிணைந்த நகரம் உருவாக்கப்படும்.

* ரூ.7 ஆயிரத்து 650 கோடியில் பீதர்-கலபுரகி-பல்லாரி இடையே 4 வழிச்சாலை அமைக்கப்படும்.

* ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.2,647 கோடி நிதி ஒதுக்கப்படும்.

*தாவணகெரே, கொப்பலில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.

* சுற்றுலாத்துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உடுப்பி மாவட்டம் பைந்தூரில் மெரினா கடற்கரை உருவாக்கப்படும்.

* மங்களூரு-கார்வார்-கோவா-மும்பைக்கு நீர் வழிப்பாதையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புறநகர் ரெயில் திட்டம்

* பெங்களூருவில் புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்களில் சாலைகளை சீரமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* பெங்களூருவில் மழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.3,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

* பெங்களூருவில் 5-வது கட்ட காவிரி குடிநீர் திட்ட பணிகள் விரைவாக முடிக்கப்படும். இதன் மூலம் மேலும் 50 லட்சம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும்.

* பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் குப்பை கழிவுகள் பதப்படுத்தும் மையம் நிறுவப்படும்.

* பெங்களூருவில் பெண்களுக்காக தனி கழிவறைகள் அமைக்கப்படும்.

* தாவணகெரேயில் 3-வது உலக கன்னட மாநாடு நடத்தப்படும்.

* கிராம உதவியாளர்களின் சம்பளம் ரூ.1,000 உயர்த்தப்படும்.

* கோவில்கள், மடங்களுக்கு ரூ.1,000 கோடி வழங்கப்படும்.

* 2-ம் நிலை நகரங்களில் 100 முதல் 200 இருக்கைகள் உள்ள தியேட்டர்கள் கட்ட ஊக்கம் அளிக்கப்படும்.

* ஆட்டோ டிரைவர்கள், டாக்சி டிரைவர்கள், மின் வணிக டெலிவரி தொழிலாளர்களின் நலனுக்காக முதல்-மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் வரை சிகிச்சை பெற வசதி ஏற்படுத்தப்படும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்று இருக்கிறது.

2.40 மணி நேரம் வாசித்தார்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று சட்டசபையில் கர்நாடக பட்ஜெட்டை காலை 10.15 மணிக்கு தாக்கல் செய்து பேசத்தொடங்கினார். அவர் பகல் 12.55 மணிக்கு பட்ஜெட் புத்தகத்தை வாசித்து நிறைவு செய்தார். அவர் 2.40 மணி நேரம் புத்தகத்தை இடைவிடாமல் வாசித்தார். இது பசவராஜ் பொம்மையின் 2-வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட் அமலுக்கு வர வேண்டுமெனில் வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் பசவராஜ் பொம்மையே முதல்-மந்திரி பதவியில் அமர வேண்டும். அப்போது தான் இந்த பட்ஜெட் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும். இல்லாவிட்டால் முதல்-மந்திரி பதவிக்கு புதிதாக வருகிறவர்கள் புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சி இருக்கைகள் காலி

பொதுவாக கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் ஆஜராவார்கள். ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி எம்.எல்.ஏ.க்கள் பலரும் தங்கள் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளுங்கட்சி வரிசையில் பெரும்பாலான இருக்கைகள் நிரம்பி இருந்தன. ஆனால் எதிர்க்கட்சி வரிசைகளில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. ஜனதா தளம்(எஸ்) தலைவர் குமாரசாமி சபையில் ஆஜராகவில்லை. காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களின் காதுகளில் பூ சுற்றி வந்திருந்தனர். இது சபையின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்