கதக்கில் வெயில் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க போலீசார் புதிய முயற்சி

கதக்கில் வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க போலீசார் புதிய முயற்சி செய்துள்ளனர். அதாவது சிக்னல்களில் 25 அடி உயரத்துக்கு பந்தல் அமைத்துள்ளனர்.

Update: 2023-05-16 18:45 GMT

பெங்களூரு:

கதக்கில் வெயில் கொடுமை

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி தற்போது வரை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. சமீபத்தில் பெங்களுரு உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்திருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது.

இந்த நிலையில், வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க கதக் மாவட்ட போலீசார் புதிய முயற்சி எடுத்துள்ளனர். கதக் மாவட்டத்தில் காலை 7 மணியில் இருந்தே வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. மாலை 5.30 மணிவரை இந்த தாக்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து சிக்னல்களில் மதியம் நேரம் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் காத்திருக்க முடியாமல் பரிதவித்து வந்தனர்.

25 அடி உயரத்துக்கு பந்தல்

இதுபற்றி அறிந்த கதக் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாபாஷாப் நியாமகவுடா புது முயற்சியை எடுத்துள்ளார். அதாவது, கதக் டவுனில் உள்ள முக்கிய சிக்னல்களில் மட்டும் பந்தல் அமைத்திருக்கிறார். அதாவது 'கிரீன் கவுஸ்' என்ற பெயரில் இந்த திட்டத்தை அவர் தொடங்கி இருக்கிறார். இதற்காக கதக் டவுன் முலகுந்த் நாகா சர்க்கிளில், 4 சாலைகளை இணைக்கும் பகுதியில், 2 சிக்னல்களில் இந்த பந்தல் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அந்த பந்தல் 25 அடி உயரத்துடன், சூறைக்காற்று அடித்தால் கூட பறந்து போக முடியாத அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. 2 சிக்னல்களில் அமைக்கப்பட்டு இந்த 'கிரீன் கவுசில்' இருசக்கர வாகன ஓட்டிகள், சிக்னல் போடப்பட்டு இருக்கும் போது வந்து நின்றால் நிழலில் நிற்கும் அனுபவம் கிடைக்கும். அவர்கள் மீது வெயில் விழுவதில்லை.

ரூ.8 லட்சம் செலவு

ஒரு சிக்னலில் பந்தல் அமைக்க ரூ.8 லட்சம் செலவாகி இருக்கிறது. முதற்கட்டமாக 2 சிக்னல்களிலும், அடுத்து 2 சிக்னல்களிலும் இந்த பந்தல் அமைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகள் வெயிலில் இருந்து தப்பித்து வருகிறார்கள். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பும், பாராட்டுகளும் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் துறை சிறப்பான முயற்சியை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது என்று கதக் டவுன் பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜுனய்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கதக் போலீஸ் சூப்பிரண்டு பாபாஷாப் நியாமகவுடா கூறியதாவது:-

வாகன ஓட்டிகளை பாதுகாக்க...

கதக்கில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மதியம் வாகனங்களில் வெளியே சென்றுவிட்டு போக்குவரத்து சிக்னல்களில் வெயிலின் கொடுமையால் காத்திருக்க முடியாமல் மிகவும் சிரமப்படுவதை பார்க்க முடிந்தது. சில வாகன ஓட்டிகள் சிக்னல்களில் நிற்க கூடாது என்பதற்காக, விதிமுறைகளை மீறி சிக்னல்களை மதிக்காமலும் சென்றார்கள்.

வாகன ஓட்டிகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவே இந்த 'கிரீன் கவுஸ்' அமைக்கப்பட்டு இருக்கிறது. முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்