மகளை தவறாக பேசியதால் நேபாள காவலாளி அடித்து கொன்ற நண்பர் கைது

பெங்களூருவில், மகளை தவறாக பேசிய காவலாளியை அடித்து கொன்ற அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-09-21 18:45 GMT

காடுகோடி:

பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தின்னூரு அருகே சிகேஹள்ளி நேபாள காலனியில் வசித்து வந்தவர் பிரேம்ராஜ் உபாத்யா (வயது 40). அதே பகுதியில் வசித்து வருபவர் தர்மேந்திர சிங். இவர்கள் 2 பேரும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். பெங்களூருவில் காவலாளியாக வேலை பார்த்து வந்தனர். தர்மேந்திர சிங் ஒரு ஓட்டலில் காவலாளியாக வேலை செய்தார். அடிக்கடி மதுஅருந்தி விட்டு ஓட்டலுக்கு வந்ததால் சமீபத்தில் வேலையில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருந்தார்.

நேற்று முன்தினம் தர்மேந்திர சிங்கின் மனைவி, மகள் வெளியே சென்றிருந்தார்கள். இதனால் தர்மேந்திர சிங் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது தனது நண்பர்களான பிரேம்ராஜ் உள்பட 3 பேருடன் சேர்ந்து அவர் மதுஅருந்தி உள்ளார். அவர்களில் 2 பேர் மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். அதன்பிறகும் மதுபான விடுதிக்கு சென்று தர்மேந்திர சிங், பிரேம்ராஜ் மதுஅருந்திவிட்டு வந்துள்ளனர்.

தர்மேந்திர சிங் வீட்டில் வைத்து பிரேம்ராஜ் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது தர்மேந்திர சிங்கின் மகள் குறித்து பிரேம்ராஜ் தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் குடிபோதையில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே ஆத்திரமடைந்த தர்மேந்திர சிங், பிரேம்ராஜை அடித்து தாக்கியுள்ளார். இதில், பலத்தகாயம் அடைந்த பிரேம்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி தனது நண்பர்களுக்கும், போலீசாருக்கும் தர்மேந்திர சிங் தகவல் தெரிவித்தார்.

போலீசார் விரைந்து வந்து பிரேம்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தர்மேந்திர சிங்கின் மகள் குறித்து குடிபோதையில் பிரேம்ராஜ் தவறாக பேசியுள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டையில் கொலை நடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மேந்திரசிங்கை கைது செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்