அண்டை மாநில தாய் மொழி வாழ்த்து பாடல் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்-கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
அண்டை மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் தாய் மொழி வாழ்த்து பாடல் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு:-
கன்னட தாய் வாழ்த்து பாடல்
கர்நாடகத்தில் கன்னட தாய் வாழ்த்து பாடல் 2 நிமிடங்கள் 30 நொடிகள் இருக்க வேண்டும் என்று மைசூருவை சேர்ந்த மறைந்த கலைஞர் அனந்தசுவாமி தெரிவித்து இருந்தார். இதனையே பின்பற்ற வேண்டும் என்று கர்நாடக அரசு கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் 25-ந் தேதி அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்து இருந்தது. இதனை எதிர்த்து கன்னட பாடகர் ஹூக்கேரி கிருஷ்ணமூர்த்தி கர்நாடக ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்சித் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த மனு மீதான விசாரணையின் போது தன்னையும் ஒரு பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் என்று கோரி மிருதுன்ஜெயா தொட்டவாடா மனு தாக்கல் செய்திருந்தார்.
தகவல் தெரிவிக்க உத்தரவு
மேலும் மிருதுன்ஜெயா சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும் போது, கன்னட தாய் வாழ்த்து பாடல் விவகாரத்தில் தங்களிடம் ஏராளமான ஆதாரங்கள் இருக்கிறது. வாழ்த்து பாடல் எந்த ராகத்தில், எந்த வரிகளை உபயோகிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கின்றன. அதனை பின்பற்ற வேண்டும் என்று வாதிட்டார். உடனே நீதிபதி குறுக்கிட்டு இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் வழங்கப்படுகிறது.
அதாவது அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவில் தாய் வாழ்த்து பாடலில் இருக்கும் விதிமுறைகள், பின்பற்றப்படும் நடைமுறைகள், எந்த மாதிரி பாடல் அமைந்துள்ளது என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கோர்ட்டுக்கு அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்சித் உத்தரவிட்டார். மேலும் இந்த மனு மீதான விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.