குஷால்நகர் அருகே கர்ப்பிணி யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மர்மநபர்கள்

குஷால்நகர் அருகே கர்ப்பிணி யானையை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அவர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-05-22 18:45 GMT

குடகு-

குஷால்நகர் அருகே கர்ப்பிணி யானையை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அவர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.

காட்டு யானை அட்டகாசம்

குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா பாலுகோடி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வெளியேறி விளைநிலங்களில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தன. பயிர்களை நாசப்படுத்தி வந்ததால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இதனால் காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி வனத்துறையினரும் காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

துப்பாக்கியால் சுட்டு கொன்ற...

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலுகோடி கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரின் தோட்டத்தில் காட்டு யானை ஒன்று செத்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர், கால்நடை டாக்டரை வரவழைத்தனர்.

கால்நடை டாக்டர் விரைந்து வந்து யானைக்கு பிரேத பரிசோதனை செய்தார். அப்போது அந்த யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மேலும் யானையின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது. துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் யானையின் வயிற்றுக்குள் இருந்த குட்டி யானையும் செத்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அதேப்பகுதியில் அந்த யானையை குழித்தோண்டி புதைத்தனர்.

வனத்துறையினர் விசாரணை

இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், 20 வயது நிரம்பிய அந்த யானை கர்ப்பமாக இருந்துள்ளது. அந்த யானை இரவில் உணவு தேடி தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. அப்போது யாரோ மர்மநபர்கள் யானையை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அந்த யானை சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து செத்தது. அதன் வயிற்றுக்குள் இருந்த சிசுவும் செத்தது. யானை செத்து கிடந்த இடத்தில் 3 தோட்டாக்கள் கிடந்தது. அதனை வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையடுத்து வனத்துறையினர் கர்ப்பிணி யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

3 தோட்டாக்கள்

இதுகுறித்து மடிகேரி மண்டல வன பாதுகாவலர் சிவராம் பாபு கூறுகையில், வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த கர்ப்பிணி யானையை யாரோ மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். யானை செத்து கிடந்த இடத்தில் 3 தோட்டாக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அதனை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகள் பற்றி எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்