கார்கலா அருகே டெட்டனேட்டர்கள்-வெடிபொருட்கள் கடத்திய 3 பேர் கைது

டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிபொருட்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-30 18:45 GMT

மங்களூரு-

கார்கலா அருகே டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிபொருட்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டனாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

டெட்டனேட்டர்கள்

உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா சனூர் முரத்தங்கடி பகுதியில் சட்டசபை தேர்தலையொட்டி தற்காலிக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு இருக்கிறது. நேற்று முன்தினம் இரவு அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 3 வாலிபர்கள் 2 ஸ்கூட்டர்களில் வந்தனர். போலீசாரை கண்ட அவர்கள் ஸ்கூட்டர்களை திருப்பிக் கொண்டு அங்கிருந்து வேறு வழியாக செல்ல முயன்றனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தட்சிண கன்னடா மாவட்டம் பச்சநாடியைச் சேர்ந்த நாகராஜா, சங்கரா மற்றும் ராகவேந்திரா என்பதும், 3 பேரும் சேர்ந்து ஸ்கூட்டர்களில் டெட்டனேட்டர்கள் மற்றும் வெடி பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

கைது

அவர்களிடமிருந்து 30 டெட்டனேட்டர்கள் மற்றும் வெடி பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். அதையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றிய தகவல்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.

பின்னர் அவர்களிடமிருந்து 30 டெட்டனேட்டர்கள், வெடிபொருட்கள் மற்றும் அவற்றை கடத்தி வந்த 2 ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் நாகராஜா, சங்கரா, ராகவேந்திரா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து கார்கலா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பயங்கரவாத செயலில்...

ஏற்கனவே மங்களூருவில் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாதி ஷாரிக் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் தனது பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை திரட்டி வந்ததும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

தற்போது டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிபொருட்களுடன் 3 பேர் கைதாகி இருப்பது உடுப்பி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டு இருக்கலாமோ? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்