'ஹர் ஹர் மகாதேவ்' பட விவகாரம்: தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஜித்தேந்திர அவாத்க்கு ஜாமீன்
‘ஹர் ஹர் மகாதேவ்' பட விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஜித்தேந்திர அவாத்துக்கு ஜாமீன் வழங்கி தானே செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
மராட்டியத்தில் 'ஹர் ஹர் மகாதேவ்' என்ற மராத்தி படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடி வருகிறது. இந்த படத்தில் சத்ரபதி சிவாஜியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஜித்தேந்திர அவாத் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து, கடந்த 7-ந் தேதி இரவு தானேயில் ஹர், ஹர் மகாதேவ் படம் ஓடி தியேட்டருக்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்தார். அவர்கள் தியேட்டரில் படம் பார்த்து கொண்டு இருந்தவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.
மேலும் படத்தை தொடர்ந்து திரையிடவிடாமல் தடுத்தனர். இந்த சம்பவத்தின் போது சில பார்வையாளர்கள் ஜிதேந்திர அவாத் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகின. இந்த சம்பவம் தொடர்பாக ஜித்தேந்திர அவாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வர்தக் நகர் போலீசார் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
அதன்பின், தானே மாவட்ட செசன்சு கோர்ட்டில் ஜித்தேந்திர அவாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில், 'ஹர் ஹர் மகாதேவ்' படக்காட்சியை தடுத்து நிறுத்திய விவகாரத்தில் ஜாமீன் வழங்கக்கோரி ஜித்தேந்திர அவாத் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஜித்தேந்திர அவாத் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு ஜாமீன் வழங்கி தானே செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது.