அமிர்தசரசில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குறும்புத்தன மாணவர்கள்; பலத்த போலீஸ் பாதுகாப்பு
பஞ்சாப்பில் குறும்புத்தன மாணவர்கள் சிலர் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அமிர்தசரஸ்,
பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் உள்ள டி.ஏ.வி. என்ற பள்ளி கூடத்திற்கு அதன் முதல்வர் பெயரிலான இன்ஸ்டாகிராமுக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது. இதனால், மிரண்டு போன பள்ளி முதல்வர் போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார்.
இதுபற்றி, அமிர்தசரஸ் நகர காவல் ஆணையாளர் எம்.எஸ். புல்லார் கூறும்போது, துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்ததும் பள்ளிக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முதல்வருக்கு இன்று இன்ஸ்டாகிராமில் மிரட்டல் செய்தி வந்துள்ளது.
புகாரை பெற்ற பின் போலீஸ் சூப்பிரெண்டு தலைமையிலான காவல் துறையினர் அந்த பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.
போலியான இன்ஸ்டாகிராம் ஐ.டி.யில் இருந்து செய்தி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதுவும், கூகுள் டிரான்ஸ்லேட்டை பயன்படுத்தி, ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் எழுதியுள்ளனர்.
அந்த பள்ளி கூடத்தில் படித்து வரும் 3 மாணவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களது பெற்றோரை அழைத்து தகவல் தெரிவித்து உள்ளோம். முதல்வரின் கோரிக்கைக்கு ஏற்ப நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் என புல்லார் கூறியுள்ளார்.