உப்பள்ளியில் மத்திய அரசு சார்பில் தேசிய இளைஞர் திருவிழா; பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

மத்திய அரசு சார்பில் உப்பள்ளியில் தேசிய இளைஞர் திருவிழா நாளை (வியாழக்கிழமை) ெதாடங்குகிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Update: 2023-01-10 20:43 GMT

பெங்களூரு:

பஞ்சரத்னா யாத்திரை

கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்குகிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதனால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. தேசிய கட்சிகளை முந்தி கொண்டு ஜனதா தளம் (எஸ்) கட்சி முதல்கட்டமாக 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா மேலிட தலைவா்கள் அடிக்கடி கர்நாடகம் வந்து செல்கிறார்கள்.

கட்சி கூட்டங்கள், மாநாடுகளில் கலந்து கொள்வது என்று அவர்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும் பஸ் பயணம், கட்சி அணிகளின் மாநாடு என்று தீவிரமாக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. மற்றொரு புறம் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவ்வாறு கர்நாடக அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் சூழ்நிலையில் பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) கர்நாடகம் வருகிறார்.

வீட்டு உரிமை பத்திரம்

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் உப்பள்ளிக்கு வரும் அவர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய இளைஞர் திருவிழாவில் கலந்து கொண்டு அதனை தொடங்கி வைக்கிறார். இது ஒரு மத்திய அரசு நிகழ்ச்சி. அவர் வருகையை முன்னிட்டு உப்பள்ளி-தார்வாரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு அந்த விழாவை தற்போது கர்நாடகத்தில் நடத்துவது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து வருகிற 19-ந் தேதி பிரதமர் மோடி கலபுரகிக்கு வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு லம்பானி இன மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரத்தை வழங்குகிறார். இப்படி அடுத்தடுத்த கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அதே போல் பா.ஜனதாவின் பிற தலைவர்களும் கர்நாடகம் வருகை தர திட்டமிட்டுள்ளனர்.

தீவிரமாக களப்பணி

கர்நாடகத்தில் இதுவரை பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறாத பா.ஜனதா, இந்த முறை எப்படியாவது பெரும்பான்மை பலத்தை பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அக்கட்சி தலைவர்கள் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறார்கள். பிரதமர் மோடியும், கர்நாடகத்தை மீண்டும் பா.ஜனதா வசமாக்கி கொள்ள தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். தேர்தல் நெருங்கும்போது, கர்நாடகத்திற்கு பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதாவது, பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க மத்திய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இதனால் சித்ரதுர்கா, பல்லாரி, தாவணகெரே உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆதரவை பெற முடியும் என்று பா.ஜனதா கருதுகிறது. இது எந்த அளவுக்கு அக்கட்சிக்கு கை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்