டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்; பிரதமர் மோடிக்கு ஷிண்டே, எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த பிரதமர் மோடியை ஏக்நாத் ஷிண்டே, தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Update: 2023-07-18 12:11 GMT

புதுடெல்லி,

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன. இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று பேசும்போது, பிரதமர் மோடி அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளால் நேர்மறை தாக்கம் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டுகளில் பா.ஜ.க. மக்களை நன்றாக சென்றடைந்து உள்ளது.

அதன் வெற்றிக்கான வாய்ப்பும் அதிகரித்து உள்ளது என அவர் கூறினார். இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) சார்பில் 38 கட்சிகள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டது.

இதில், தங்களது பலம் நிரூபிக்கப்படும் வகையில் கூட்டத்திற்கு, ஆளும் பா.ஜ.க. ஏற்பாடு செய்து உள்ளது. இந்த கூட்டத்தில் தற்போது கூட்டணியில் உள்ள மற்றும் புதிதாக கூட்டணியில் சேர்ந்த கட்சிகள் உள்ளிட்டவையும் பங்கேற்கின்றன.

சமீப வாரங்கள் மற்றும் மாதங்களில் புதிதாக கூட்டணியில் கட்சிகளை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ள ஆளும் பா.ஜ.க. அதில் வெற்றியும் பெற்று உள்ளது.

அக்கட்சி கூட்டணியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு வெளியேறிய சுகேல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவர் ஓ.பி. ராஜ்பார் மீண்டும் அந்த கூட்டணியில் இணைந்து உள்ளார்.

இவரை போன்று பீகாரில் மற்றொரு ஓ.பி.சி. பிரிவை சேர்ந்த சிராக் பஸ்வானையும் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும்படி நட்டா கேட்டு கொண்டு உள்ளார். சிராக் பஸ்வான், முன்னாள் மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வானின் மகன் ஆவார்.

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் மத்திய பாதுகாப்பு மந்திரியான ராஜ்நாத் சிங் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து உள்ளார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி கூட்டம் நடைபெறும் தி அசோக் ஓட்டலுக்கு வருகை தந்து உள்ளார். அவரை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தேர்தலை முன்னிட்டு 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டம் பெங்களூருவில் இன்று நடந்துள்ள சூழலில், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 38 கட்சிகள் பங்கேற்கும் கூட்டமும் இன்று நடைபெறுவது அரசியல் அரங்கில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்