நாசி வழி கொரோனா தடுப்பூசி; உலகிற்கு எடுத்துக்காட்டான இந்தியா: டாக்டர் வி.கே. பால்

நாசி வழியே செலுத்தும் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உலகின் முன் ஓர் எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது என டாக்டர் வி.கே. பால் கூறியுள்ளார்.

Update: 2022-09-07 16:47 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் இரண்டாண்டுகளுக்கும் கூடுதலாளாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக கொரோனா தடுப்பூசி ஒரு வலிமையான ஆயுதம்போல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசியானது முதல் மற்றும் இரண்டாவது தவணைகளாக செலுத்தப்படுவதுடன், பூஸ்டர் தடுப்பூசியாகவும் போட வலியுறுத்தப்படுகிறது. இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் மக்களுக்கு அதிகரிக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும்.

இந்நிலையில், நாசி வழியே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதன்படி, அந்நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்வதற்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் வழங்கியுள்ளது.

இதனால், நாசி வழியே கொரோனா தடுப்பூசி செலுத்தும் முறையை மேற்கொள்ளும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக் பெற்றுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு கிடைத்த பெரிய ஊக்கம் என இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சக மந்திரி மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டு கூறியுள்ளார்.

இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனாவுக்கு எதிரான இந்திய போரில் பெரிய ஊக்கம் கிடைத்து உள்ளது. அவசரகால சூழலில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டுப்படுத்தப்பட்ட முறையிலான பயன்பாட்டுக்காக, கொரோனாவுக்கு எதிரான நோயெதிர்ப்பு ஆற்றல் பெறுவதற்கான பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழியேயான கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இந்த நடவடிக்கையானது, பெருந்தொற்றுக்கு எதிரான நமது கூட்டு போரில் நம்மை வலுப்பெற செய்யும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவானது, அதன் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மற்றும் மனிதவளங்களை பயன்படுத்தி உள்ளது. அறிவியல் சார்ந்த அணுகுமுறையால் நாம் கொரோனாவை வெற்றி பெறுவோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி நிதி ஆயோக் அமைப்பின் சுகாதார உறுப்பினரான டாக்டர் வி.கே. பால் கூறும்போது, கொரோனாவுக்கு எதிரான போரில் இது ஒரு மற்றொரு உபகரணம். இந்த புதுமையான மற்றும் அதிக ஆற்றல் வாய்ந்த தடுப்பூசியை உருவாக்கி உலகின் முன் ஓர் எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது. இது சுயசார்பு மற்றும் சுயநம்பிக்கை பற்றிய கதை என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்