ஆதார் பூனாவல்லா பெயரில் சீரம் அமைப்பிடம் மர்ம நபர்கள் ரூ.1 கோடி பணமோசடி

சீரம் இந்தியா அமைப்பின் தலைவர் ஆதார் பூனாவல்லா பெயரில் அந்நிறுவனத்திடம் மர்ம நபர்கள் ரூ.1 கோடி பணமோசடி செய்துள்ளனர்.

Update: 2022-09-11 01:55 GMT



புனே,



மராட்டியத்தின் புனே நகரில் உள்ள சீரம் இந்தியா அமைப்பு கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஆதார் பூனாவல்லா இருந்து வருகிறார்.

இந்நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக சதீஷ் தேஷ்பாண்டே என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில், பூனாவல்லா என்ற பெயரில் தங்களை அடையாளம் காட்டி கொண்ட மர்ம நபர்கள் சிலர், தேஷ்பாண்டேவுக்கு வாட்ஸ்அப் வழியே தகவல் அனுப்பி, பல்வேறு வங்கி கணக்குகளில் உடனடியாக பணபரிமாற்றம் செய்யும்படி கேட்டு கொண்டுள்ளனர்.

இதனை உண்மை என நம்பி, ரூ.1 கோடியே ஒரு லட்சத்து ஆயிரத்து 554 வரை நிறுவனத்தின் நிதி துறையிடம் இருந்து அந்த வங்கி கணக்குகளுக்கு பல்வேறு பரிமாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன் பின்னரே பெரிய மோசடி நடந்துள்ளது என தெரிய வந்துள்ளது.

பூனாவல்லா, ஒருபோதும் பணபரிமாற்றம் செய்யவோ அல்லது அதுபற்றி வாட்ஸ்அப் தகவல் அனுப்பவோ இல்லை என தெரிய வந்ததும், பணமோசடி பற்றி பந்த்கார்டன் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி புனே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்