ஹாசனில் கொடூரம்: காட்டு யானையை சுட்டுக் கொன்ற மர்மநபர்கள்
ஹாசனில் காட்டு யானையை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஹாசன்: ஹாசனில் காட்டு யானையை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
காட்டு யானை சுட்டுக் கொலை
ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா கொர்கிஹள்ளி கிராமம் அரஹள்ளி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. காட்டு யானைகள் தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் விளை பயிர்களையும் யானைகள் நாசப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் கோர்கிஹள்ளி கிராமத்தை சேர்ந்த சையத் சத்தார் என்பவரது தோட்டத்தில் நேற்று காலை ஒரு காட்டு யானை துப்பாக்கி குண்டு பாய்ந்து செத்து கிடந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது காட்டு யானையை யாரோ மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரியவந்தது.
தீவிர விசாரணை
இதையடுத்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அருகில் உள்ள வனப்பகுதியில் யானையின் உடல் புதைக்கப்பட்டது.
கொல்லப்பட்ட யானைக்கு 15 வயது இருக்கும் என்றும், அது ஆண் யானை என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர் அட்டகாசத்தில் காட்டு யானைகள் ஈடுபட்டு வந்ததால், மர்மநபர்கள் ஆத்திரத்தில் காட்டு யானையை சுட்டுக்கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள். அதன்பேரில் அரஹள்ளி வனத்துறையினரும், போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.