இளம்பெண் வரவேற்பாளர் கொலை; பெண்களை மதிக்காத நாடு எதனையும் சாதிக்க முடியாது: ராகுல் காந்தி தாக்கு
பா.ஜ.க.வினர் அதிகாரம் தவிர வேறு எதனையும் மதிப்பதில்லை என இளம்பெண் வரவேற்பாளர் கொலையை சுட்டி காட்டி ராகுல் காந்தி பேசியுள்ளார்.
திருவனந்தபுரம்,
உத்தரகாண்டில் பா.ஜ.க. பிரமுகர் மற்றும் முன்னாள் மந்திரியான வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யாவுக்கு ரிஷிகேஷ் அருகே வனந்த்ரா என்ற பெயரில் சொகுசு விடுதி உள்ளது.
இதில், வரவேற்பாளராக பணியாற்றிய அங்கிதா பண்டாரி (வயது 19) என்ற இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன் ஏரி ஒன்றில் உயிரற்ற உடலாக மீட்கப்பட்டார். இதுபற்றி புகார் அளித்தும், 4 நாட்கள் கழித்தே, கடந்த 22-ந்தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் காலதாமதம் ஏற்படுத்தி உள்ளனர் என கூறப்படுகிறது.
அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா மீது சந்தேகத்தின் பேரில் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், அங்கிதாவை ரிசார்ட் உரிமையாளரான புல்கிட் ஆர்யாவே விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கில் புல்கிட் ஆர்யா, அதற்கு துணை போன ரிசார்ட் மேலாளர் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன்மீது நடந்த முதற்கட்ட விசாரணையில், பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்ததால் அங்கிதாவை விடுதி உரிமையாளர் புல்கிட் கொலை செய்து கால்வாயில் வீசியது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி உத்தரவின் பேரில் அங்கிதா வரவேற்பாளராக பணியாற்றிய புல்கிட் ஆர்யாவின் சொகுசு விடுதியின் ஒரு பக்கம் இடித்து தள்ளப்பட்டது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.
எனினும், சான்று ஆவணங்கள் இருந்த ரிசார்ட் ஏன் இடிக்கப்பட்டது என அங்கிதாவின் தந்தை கேள்வி எழுப்பினார். இதுபற்றி கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, இதனை கற்பனை செய்து பாருங்கள். பா.ஜ.க. தலைவர் ஓட்டல் உரிமையாளராக இருக்கிறார். அவரது மகன் இளம்பெண் ஒருவரை விபசாரத்தில் ஈடுபடுத்த கட்டாயப்படுத்துகிறார். விபசாரத்திற்கு அவர் மறுத்தபோது, ஏரியில் உயிரிழந்த அவரது உடல் கண்டெடுக்கப்படுகிறது என்று பேசியுள்ளார்.
பா.ஜ.க.வினர் மற்றும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பெண்களை ஒரு பொருளாகவும், இரண்டாந்தர குடிமக்களாகவும் எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு. இதுவே அவர்களது உண்மையான கொள்கை. இந்த கொள்கைகளால் இந்தியா ஒருபோதும் வெற்றி பெறாது.
ஒரு நாடு தனது பெண்களை மதிக்கவும், அதிகாரமளிக்கவும் கற்றுக்கொள்ளாதபோது எதனையும் சாதிக்க முடியாது. பா.ஜ.க.வினர் அதிகாரம் தவிர வேறு எதனையும் மதிப்பதில்லை என்று அவர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.