மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த வாலிபர் கைது
பத்ராவதியில் மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவமொக்கா:
பத்ராவதியில் மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூதாட்டி கொலை
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பேப்பர் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட சுண்ணதஹள்ளி கிராமத்தில் உள்ள கோவில் அருகே சங்கரம்மா (வயது 70) என்ற ஆதரவற்ற மூதாட்டி பிச்சை எடுத்து வசித்து வந்தார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த மூதாட்டிக்கு பணம் மற்றும் உணவு பொருட்கள் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி கோவில் அருகே சங்கரம்மா பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் அர்ச்சகர், இதுகுறித்து பேப்பர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், யாரோ மர்மநபர்கள் மூதாட்டி சங்கரம்மாவை கொன்று தங்க கம்மல் மற்றும் மூக்குத்தியை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
வாலிபர் கைது
இதுகுறித்து பத்ராவதி பேப்பர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சங்கரம்மாவை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவை சேர்ந்த கருணா தேவாடிகா (வயது 24) என்பது தெரியவந்தது.
அவர் தான் கடந்த 2-ந்தேதி இரவில் கோவில் அருகே வந்து மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து மூதாட்டியின் தங்க நகைகள் மற்றும் ரூ.14 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான கருணாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.