மகேஷ் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் உள்பட 11 பேர் கைது

ரவுடி மகேஷ் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் எல்லையில் அவர்கள் பதுங்கியபோது சிக்கி கொண்டனர்.

Update: 2023-08-07 18:45 GMT

ஆனேக்கல்:

ரவுடி மகேஷ் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் எல்லையில் அவர்கள் பதுங்கியபோது சிக்கி கொண்டனர்.

படுகொலை

பெங்களூரு புறநகர் ஆனேக்கல் அருகே வசித்து வந்தவர் மகேஷ் என்ற சித்தாப்புரா மகேஷ். இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 4-ந் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது அவர் கூட்டாளிகளுடன் காரில் புறப்பட்டார்.

அப்போது அவரது காரை, அந்த வழியாக வந்த மற்றொரு கார் வழிமறித்தது. மேலும் அதில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் 6 பேர் ரவுடி மகேசை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா போலீசார் விசாரித்து வந்தனர். அவர்கள் ரவுடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

11 பேர் கைது

மேலும் அங்கு பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை சம்பவம் ஒன்றில் பழிக்குப்பழியாக மகேஷ் கொலை செய்யப்பட்டதும், இதில் வில்சன்கார்டன் நாகா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ரவுடியின் கொலையில் தொடர்புடையவர்கள் தமிழ்நாடு ஓசூர் எல்லையில் பதுங்கி இருப்பது குறித்து தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கு பதுங்கி இருந்த 11 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வில்சன் கார்டன் நாகா, சித்தாப்புரா சுனில், கண்ணன், மனு, பிரதீப், சீனிவாசா, கோகுல், சுரேஷ், கார்த்தி உள்பட 11 பேர் என்பது தெரிந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்