தொழில் அதிபர்கள் 2 பேர் மீது மர்ம கும்பல் துப்பாக்கி சூடு
தொழில் அதிபர்கள் 2 பேர் மீது மர்ம கும்பல் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு:
தொழில் அதிபர்கள் 2 பேர் மீது மர்ம கும்பல் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கி சூடு
பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்தவர் அசோக். கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இதேபோல் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவாரெட்டி. இவரும், தொழில் அதிபர் ஆவார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில், சீ.கே.ஹள்ளி பகுதி சாலையில் இருவரும் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த மர்ம கும்பல் காரை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டது.
இதில் அசோக் மற்றும் சிவரெட்டி ஆகிய 2 பேர் மீதும் தோட்டக்கள் பாய்ந்தன. இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் சரிந்தனர். இதற்கிடையே அந்த கும்பல் காரில் தப்பித்து சென்றது. அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர்கள் 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திர கும்பல்
இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கும், சம்பவம் நடந்த இடத்திற்கும் சென்று பார்வையிட்டனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அசோக் மற்றும் சிவாரெட்டி இருவரும் சேர்ந்து கட்டுமான நிறுவனம் நடத்தி வருவது தெரியவந்தது. மேலும், தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் ஆந்திர கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என அவர்கள் கூறினர். இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் சாலையில் நின்ற 2 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.