அரசுக்கு எதிராக செயல்படும் முனிசாமி எம்.பி.யின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் விவகாரத்தில் அரசுக்கு எதிராக செயல்படும் முனிசாமி எம்.பி.யின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று நாராயணசாமி எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-09-10 18:45 GMT

பங்காருபேட்டை

ஆக்கிரமிப்பு நிலங்கள்

கோலார் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். அதில் சில விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இதுபற்றி ஆய்வு நடத்திய வனத்துறை அதிகாரிகள் கோலார் மாவட்டத்தில் தற்போது ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு வருகிறார்கள். இதுவரையில் வனத்துறைக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சீனிவாசப்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறை அதிகாரிகள் போலீசாருடன் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க சென்றனர். அப்போது 2 பெண்கள் விஷம் குடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டப்படி புகார் அளிக்கலாம்

இந்த நிலையில் இப்பிரச்சினை குறித்து நேற்று பங்காருபேட்டை எம்.எல்.ஏ. நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவைச் சேர்ந்த எம்.பி. முனிசாமி ரவுடித்தனம் செய்து வருகிறார். அவர் தான் ஆக்கிரமிப்புகளை மீட்க சென்ற வனத்துறையினருக்கு எதிராக விவசாயிகளை தூண்டி விட்டுள்ளார். முனிசாமி எம்.பி.யின் இந்த நடவடிக்கை அவருக்கு அழகல்ல.

ஆக்கிரமிப்பு மீட்பு பணி சட்டப்படி நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள் சார்பில் ஒரு பிரதிநிதியை நியமித்து ஆய்வு செய்து கொள்ளலாம். தவறு இருந்தால் அதுபற்றி சட்டப்படி புகார் அளிக்கலாம்.

கண்டிக்கத்தக்கது

அரசு பிரதிநிதியாக இருந்து கொண்டு அரசுக்கு எதிராக மக்களுடன் கைகோர்க்கும் முனிசாமி எம்.பி.யின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. சட்டத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இதுபற்றி கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டு விவசாயிகளுக்காக சிறப்பு நிதி ஒதுக்குமாறு முதல்-மந்திரி சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவர்களுக்கான வசதிகளை விரைவில் செய்து கொடுப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா உறுதி அளித்துள்ளார்.

பட்டு விவசாயிகளுக்காக ஏராளமான ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. அதன்மூலம் அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்