குஜராத்திகளும், ராஜஸ்தானிகளும் வெளியேற்றப்பட்டால் மக்களிடம் பணம் இருக்காது - கவர்னர் சர்ச்சை பேச்சு
குஜராத்திகளும், ராஜஸ்தானிகளும் வெளியேற்றப்பட்டால் மராட்டிய மக்களிடம் பணம் இருக்காது என அம்மாநில கவர்னர் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநில கவர்னராக செயல்பட்டு வருவபவர் பகத் சிங் கோஷ்யாரி. இவர் மும்பை புறநகர் மாவட்டம் அந்தேரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். மராட்டியத்தில் வாழும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் தொடர்பான நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்றார்.
ராஜஸ்தானியர்களும், குஜராத்திகளும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் பகத்சிங், இங்குள்ள மக்களுக்கு (மராட்டிய மக்கள்) நான் ஒன்றை கூறுவேன் அது என்னவென்றால், மராட்டியத்தை விட்டு குறிப்பாக மும்பை, தானேவை விட்டு குஜராத்திகளும், ராஜஸ்தானிகளும் வெளியேற்றப்பட்டால் உங்களிடம் பணம் இருக்காது. நாட்டின் நிதி தலைநகராகவும் மும்பை இருக்காது' என்றார்.
கவர்னரின் பேச்சு மராட்டிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கவர்னரின் பேச்சு மராட்டியம் மீதான வெறுப்புணர்வை காட்டுவதாகவும், அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மராட்டிய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.